முஸ்லிம் அல்லாதவர்களின் உணர்வுகளையும் பிரதமர் பாதுகாக்க வேண்டும்

கோலாலம்பூர், செப்டம்பர் 09-

உணர்ச்சிகரமான விவகாரங்களில் முஸ்லிம்கள் மட்டுமல்ல.முஸ்லிம் அல்லாதவர்களின் உணர்வுகளையும் பாதுகாப்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கடமைப்பட்டுள்ளார் என்று சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் பிரதமர் என்ற முறையல் முஸ்லீம்களின் உணர்வுகளை பாதுகாப்பதற்கு எந்த அளவிற்கு கடமைப்பட்டுள்ளாரோ, அதேபோன்று முஸ்லிம் அல்லாதவர்களின் உணர்வுகளையும் பாதுகாப்பதற்கு டத்தோஸ்ரீ அன்வார் கடமைப்பட்டுள்ளார் என்று டத்தோ தெங் குறிப்பிட்டார்.

முஸ்லிம்களின் உணர்வுகளைப் பாதுகாப்பதோடு, முஸ்லிம் அல்லாத சமூகத்தின் உணர்வுகளையும் புறக்கணிக்க வேண்டாம் என்றும் அன்வாருக்கு டத்தோ தெங் சாங் கிம் வலியுறுத்தினார்.

“அன்வார் சிறையில் இருந்த போது , அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டத்தை எதிர்த்து, தங்களின் பாதுகாப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல் பல்வேறு தரப்பை சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

அவ்வாறு கலந்து கொண்டவர்கள் முஸ்லிம்கள் மட்டும் அல்ல, முஸ்லிம் அல்லாதவர்களும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் என்பதை டத்தோஸ்ரீ அன்வார் கருத்தில் கொள்ள வேண்டும் என்று டத்தோ தெங் சாங் கிம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஹலால் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக டிஏபி- யை சேர்ந்த செபுதே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் – கை கண்டித்து டத்தோஸ்ரீ அன்வார் கூறியது தொடர்பில் டத்தோ தெங் சாங் கிம் கருத்து தெரிவித்திருந்தார்.

Halal சான்றிதழ் விவாகரம் தொடர்பில் திரேசா கொக்கை நேற்று சிரம்பானில் பகிரங்கமாக கண்டித்த டத்தோஸ்ரீ அன்வார், திரேசா கொக்கின் அறிக்கை பக்காத்தான் ஹராப்பான் நிலைப்பாட்டை பிரதிபலிக்க வில்லை என்று தெரிவித்து இருந்தார்.

பன்றி இறைச்சி மற்றும் மதுபானம் விற்பனை செய்யாத அனைத்து உணவகங்களும், உணவுத் தயாரிப்பு நிறுவனங்களும் ஹலால் சான்றிதழை கொண்டிருப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவான Jakim பரிந்துரை செய்துள்ளது.

எனினும் Jakim- மின் இந்த பரிந்துரை அமல்படுத்தப்படமானால் சிறு வியாபாரிகளுக்கும், உணவக உரிமையாளர்களுக்கும் பெரும் சுமையாக அமைந்து விடும் என்பதுடன், நிர்வாகச் செலவுகள் அதிகரிக்கும் என்று திரேசா கொக் கருத்து தெரிவித்து இருந்தார்.

WATCH OUR LATEST NEWS