செப்டம்பர் 10-
அந்த வெள்ளத்தோடு நாங்களும் அடித்து செல்லப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. எங்கள் நிலை மோசமாகிவிட்டது. வீடு முழுவதும் நீரில் மூழ்கிவிட்டது. எங்கள் உடைமைகள் எதுவுமே இப்போது இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கும் எனது இரண்டு குழந்தைகளுக்கும் மீதமிருப்பது உயிர் மட்டும்தான்” என கௌசியா கண்ணீர் மல்க கூறுகிறார்.
ஆந்திர மாநிலத்திலுள்ள மிகப்பெரிய நகரமான விஜயவாடாவின் ராமகிருஷ்ணாபுரத்தில், புடமேரு நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள சிறிய வீட்டில் வசித்து வருபவர் கௌசியா.
தனது இரண்டு மகள்களுடன் வசித்து வரும் இவர் தையல் வேலை செய்து வருகிறார். வெள்ளம் அவரது குடும்பத்தை நிலைகுலைய செய்துவிட்டது.
தெலங்கானாவில் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கம்மம் மாவட்டம் பாலேரு தொகுதியை சேர்ந்த யாகூப் என்பவரின் குடும்பம் முழுவதுமாக அடித்து செல்லப்பட்டது. யாகூப்பின் மகன் ஷெரீப் மட்டும் உயிர் பிழைத்திருக்கிறார். யாகூப் இறந்துவிட்டார். அவரது மனைவி சைதாபி காணாமல் போனார்.
“திடீரென்று வெள்ளம் சூழ்ந்தது. என்ன செய்வது என்று தெரியாமல், நானும், அப்பாவும், அம்மாவும் வீட்டின் மேற்கூறைக்கு மேல் ஏறினோம். மதியம் ஒன்றரை மணி வரை அங்கேயே இருந்தோம். எங்கள் வீட்டின் நான்கு அறைகளும் ஒவ்வொன்றாக இடிந்து விழுந்தன. இறுதியில், நாங்கள் நின்றிருந்த அறையும் இடிந்து விழுந்து, நானும், அம்மாவும், அப்பாவும் தண்ணீரில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டோம்” என்று வெள்ளத்தின் தீவிரத்தை பிபிசியிடம் விளக்கினார் ஷெரீப்.