செப்டம்பர் 10-
செப்டம்பர் 6, 2024 அன்று, பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா தனது 27வது பதக்கத்தை வென்றது. பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த செயல்திறன் இதுவாகும்.
இந்திய விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை இது ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில், பலரையும் இந்த வெற்றி ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஏனென்றால், பாராலிம்பிக் போட்டிக்கு சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்லவில்லை.
ஒலிம்பிக் போட்டிக்கு 110 வீரர்கள் கொண்ட குழுவை இந்தியா அனுப்பியிருந்தது. இருந்த போதிலும், இந்தியா அணியால் ஒரு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்கள் அதாவது மொத்தம் 6 பதக்கங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. இது தவிர, ஆறு வீரர்கள் நான்காவது இடத்தைப் பெற்றிருந்தனர்.
பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து 84 வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் ஒலிம்பிக்கைவிட நான்கு மடங்கு அதிக பதக்கங்களை வென்றுள்ளனர்.
இந்தியா மட்டுமல்ல, பிரிட்டன், யுக்ரேன், நைஜீரியா போன்ற நாடுகளும் ஒலிம்பிக்கைவிட பாராலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்களைப் பெற்றுள்ளன.