செப்டம்பர் 10-
சினிமா நடிகர்களின் ஆடம்பரமான பங்களாக்களை அவர்களின் நட்சத்திர அந்தஸ்துடன் அடையாளப்படுத்திய காலம் இருந்தது.
வானளாவிய வெற்றி முதல் இதயத்தை நொறுக்கும் தோல்வி வரை, இந்த பங்களாக்கள் எல்லா காலத்திலும் அவற்றுக்கு மௌன சாட்சிகளாக இருந்தன.
பாலிவுட்டின் பிரபலமான பங்களாக்கள் குறித்த இந்த சிறப்புத் தொடர், ஷாருக்கானின் ‘மன்னத்’ பங்களாவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே பிரபலமான ஒரு பங்களாவுடன் தொடங்குகிறது.
அதுதான், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கண்ணாவின் ‘ஆஷிர்வாத்’ பங்களா.
ஆனால், இந்த பங்களாவின் கதை ராஜேஷ் கண்ணா சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை அடைவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.
‘பேய் பங்களா’
மேற்கு மும்பையின் புகழ்பெற்ற புறநகர்ப் பகுதி பாந்த்ரா. இன்று இங்குள்ள பாந்த்ரா பேண்ட்ஸ்டாண்ட் மற்றும் அருகிலுள்ள கார்ட்டர் சாலை ஆகியவை முக்கிய இடங்களாக அறியப்படுகின்றன.
இன்றும் பல திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் கடலுக்கு அருகே இந்த ஆடம்பரமான பகுதியில் வசித்து வருகின்றனர்.
தற்போது பல உயரமான கட்டடங்கள் இருப்பதால் இப்பகுதி நெருக்கமான இடமாக உள்ளது. ஆனால் இந்த ஆடம்பர கட்டடங்கள் மற்றும் உயரமான கட்டடங்களுக்கு மத்தியில் நீங்கள் உற்று நோக்கினால், இன்றும் சில பாழடைந்த கட்டடங்கள் மற்றும் பல ஆண்டுகளாக உயர்ந்து நிற்கும் பழைய பங்களாக்களை காணலாம்.
இந்த கட்டடங்கள் மற்றும் பங்களாக்கள் தங்களுக்குள் ஒரு முழுமையான வரலாற்றைக் கொண்டுள்ளன. 1950-60 ஆண்டுகளில் கார்ட்டர் சாலையில் பல பங்களாக்கள் இருந்தன. அவற்றில் பெரும்பாலான பங்களாக்கள் கிழக்கு இந்திய கம்பெனி மற்றும் பார்சி சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமானவை. அதே கார்ட்டர் சாலையில் கடலை பார்த்தபடி அமைந்துள்ள ‘ஆஷியானா’ என்ற பங்களா, அந்தக் காலத்தில் இந்தி சினிமாவின் சிறந்த இசையமைப்பாளரான நௌஷாத் என்பவருடையது.