தைப்பிங் , செப்டம்பர் 10-
பேரா, தைப்பிங் கிளியன் பாவ் இடைநிலைப்பள்ளியில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை கல்வி பயின்ற மாணவர்கள், 16 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு தங்களுடன் பயின்ற சக முன்னாள் மாணவர்களை மீண்டும் ஒன்றிணைத்து, சங்கமிக்கும் நிகழ்வு கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது.
மனதைக் கவரும் வகையில் முன்னாள் மாணவர் யோகேஸ்வரன் செல்வம் தலைமையில் 20 மாணவர்கள், பல ஆண்டுகளாக நீடித்து வரும் தங்களின் நட்பு மற்றும் நினைவுகளை மீண்டும் ஒன்றிணைத்து, புதுப்பித்து, புத்துயிர் பெறச் செய்யும் ஓர் எளிமையான நோக்கத்திற்காக இந்நிகழ்வு இரண்டாவது ஆண்டாக இம்முறை மிகு குதூகலத்துடன் நடத்தப்பட்டது.

ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஒவ்வொரு கணமும் கைப்பற்றிக்கொண்டிருக்கும் தற்போதைய நிலைக்கு முன்பு, 90 களில் தங்கள் பழைய நினைவுகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற வேட்கையில் ஒரு சிறப்பு வாய்ந்த ஒன்றுக்கூடும் நிகழ்வாக இது அமைந்தது
எண்ணற்ற டிஜிட்டல் நினைவுகளைக் கொண்ட இன்றைய தலைமுறையைப் போலல்லாமல், தங்களின் இனிய பள்ளி நாட்களை மீண்டும் கண்முன்னே கொண்டு வருவதற்கு பள்ளி சீருடையுடன் முன்னாள் மாணவர்கள் பேருந்தில் வலம் வந்தனர்.
தற்போது சிறுநீராக சிகிச்சையைப் பெற்று வரும் சக முன்னாள் மாணவன் பாரதி தாஸால் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.
பாரதி தாஸின் உடல்நிலையில் பல்வேறு சவால்கள் காத்திருந்த போதிலும், பாரதியின் உறுதியும் கனவும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் ஆர்வத்தை குழுவினருக்கு தூண்டியது.
அவரது ஆசையை நிறைவேற்றி, அவரின் கனவை நனவாக்கும் வகையில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதாக கூறுகிறார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான யோகேஸ்வன் செல்வம்.

“பள்ளிக்கு மீண்டும் திரும்புவோம்” என்ற கருப்பொருளில் கிளியன் பாவ் இடைநிலைப்பள்ளி நிர்வாகத்தின் அனுமதியுடன் பள்ளி வகுப்பறையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்விற்கு பாரதி தாஸ், அம்புலன்ஸ் வண்டியின் மூலம் கொண்டு வரப்பட்டார்.
பள்ளி ஆசிரியர்களான யோகன், சக்தி,ஹஸ்மா, சுஹைதா ஆகியோர் சிறப்பு வருகை தந்தனர். பள்ளியின் முன் ஒன்றுக்கூடும் நிகழ்வு, உறுதிமொழி வாசித்தல், வகுப்பறையில் பாடம் நடத்துதல், மெர்டேக்கா கொண்டாட்டம், கேக் வெட்டி மகிழ்தல் போன்ற நிகழ்வுகள் அனைவரின் நெஞ்சை நனைத்தது என்கிறார் யோகேஸ்வரன் செல்வம்.

இந்த 20 முன்னாள் மாணவர்களும் வங்கி பணியாளர், வாகனப்பட்டறை முதலாளி, வர்த்தகப்பெண்மணி, தொழிலதிபர், ஸ்டோர் நிர்வாகி,, புரமோட்டர் மற்றும் இல்லத்தரசிகள் என்ற நிலையில் பல்வேறு தொழில் துறைகளில் உள்ளனர்.
பரபரப்பான வாழ்க்கை சூழலிலும் அனைவரையும் ஒருங்கிணைப்பதில் பெரும் சவாலை எதிர்கொண்ட போதிலும் அவர்கள் சிங்கப்பூர், ஜோகூர்பாரு, கோலாலம்பூர் மற்றும் பினாங்கு முதலிய பகுதிகளிலிருந்து வந்து நிகழ்விற்கு சிறப்பு சேர்த்தனர்.
ஒவ்வொருக்கும் குடும்ப கடமைகள் போன்ற சிரமங்கள் இருந்தபோதிலும், இந்த நிகழ்வு, வகுப்பு தோழர்கள்- தோழிகளிடையே நீடித்த பிணைப்புக்கு சான்றாக அமைந்தது.
மறக்க முடியாத அந்த இனிய பள்ளி நாட்களை மீட்டெடுத்த நெகிழ்ச்சி, ஒவ்வொரு மனதிலும் ஏற்பட்டது என்கிறார் யோகேஸ்வரன்.