கோலாலம்பூர், செப்டம்பர் 10-
விசாரணை நடைபெற்று வரும் வேளையில் தடுப்புக்காவலில் நிகழும் விசாரணை கைதிகள் மரணங்கள் அல்லது அவர்களுக்கு ஏற்படக்கூடிய காயங்கள் குறித்து போலீஸ் துறையும், மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகம்- மும் விரிவான விசாரணையை நடத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
தடுப்புக்காவல் கைதிகளின் மரணங்கள் அல்லது அல்லது காயம் தொடர்புடைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை தவிர்க்க தேவைப்படக்கூடிய பொருத்தமான நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உருவாக்கும்படி டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.
இவ்விவகாரத்தில் சுஹாகம்-முடன் இணைந்து பங்காற்றுவதற்கு போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் உறுதி அளித்து இருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
விசாரணைக்கைதிகளுக்கு எதிராக போலீசாரின் கடமை என்பது விசாரணை செய்துவது மட்டுமே. தண்டனை விதிப்பது என்பது நீதிபதிகளின் பொறுப்பாகும். ஆனால், தீர்ப்பு அளிப்பதற்கு முன்னதாகவே அவர்களை தண்டித்து விடாதீர்கள் என்று டத்தோஸ்ரீ அன்வார் கேட்டுக்கொண்டார்.
இன்று திங்கட்கிழமை சுஹாகம்- மின் 25 ஆவது நிறைவு விழா கொண்டாட்டத்தில் உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் தொடர்பில் சுஹாகம்- முடன் இணைந்து போலீஸ் தடுப்புக்காவல்களை தாம் பார்வையிடவிருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
இந்நிகவில் சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசலினா ஓத்மான், போலீஸ் படைத் தலைவர் ரஸாருதீன் ஹுசைன் மற்றும் சுஹாகம் தலைவர் ஹிஷாமுதீன் முஹம்மது யூனுஸ் ஆகியோர் கலந்து கொண்டர்.