புத்ராஜெயா,செப்டம்பர் 10-
குடிநுழைவுத்துறை தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் மற்றும் முத்திரைகளை போலியாக தயாரித்து வந்ததாக நம்பப்படும் பாகிஸ்தான் ஆடவர்களை பின்னணியாக கொண்ட ஒரு கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து கிள்ளான் பள்ளத்தாக்கில் தீவிரமாக செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் இக்கும்பலைச் சேர்ந்த ஒரு பாகிஸ்தான் ஆடவரும், ஓர் இந்தியப்பிரஜையான மாது ஒருவரும் சுபாங் ஜெயாவில் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ரஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.
இவ்விருவரும் கொடுத்த தகவலைத் தொடர்ந்து போலி ஆவணங்கள் மற்றும் முத்திரைகளை தயாரிப்பதில் மூளையாக இருந்து செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் அசார் என்று மட்டுமே அடையாளம் கூறப்பட்ட பாகிஸ்தான் ஆடவரை குடிநுழைவுத்துறை கடந்த வாரம் கோலாலம்பூரில் கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கும்பல் பிடிபட்டது மூலம் போலியான தற்காலிக வேலை பெர்மிட், குடிநுழைவு அனுமதி மற்றும் வெளியேற்றத்திற்கான 28 முத்திரைகள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கடப்பிதழ்கள், கணினி, மடிக்கணினி, அச்சு இயந்திரம் உட்பட முக்கியப் பொருட்களை குடிநுழைவுத்துறை கைப்பற்றியுள்ளதாக டத்தோ ரஸ்லின் தெரிவித்தார்.