கோலாலம்பூர், செப்டம்பர் 10-
உணவகங்களுக்கு Halal சான்றிதழ் குறித்து தாம் பேசியது தொடர்பில் தமக்கு எதிராக விசாரணை நடத்துவது என்பது அவசியமற்றது என்று செபுதே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் சமயம், இனம், அரச பரிபாலனம் ஆகியவற்றை உட்படுத்தியுள்ள 3R சட்டத்தின் கீழ் தாம் விசாரணை செய்யப்படவிருப்பதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானதாக தெரசா கோக் குறிப்பிட்டார்.
ஹலால் விவகாரத்தில் தாம் வெளியிட்டுள்ள அறிக்கையின் உள்ளடக்கத்தின் தன்மையை படித்து, ஆய்வு செய்தால் அந்த அறிக்கை, 3R விவகாரத்தை தொடுவதாக இல்லை என்பதையும் டிஏபி-யின் உதவித் தலைவரான தெரசா கோக் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டம் 298 மற்றும் 505 ஆகிய சட்டப்பிரிவுகளை தாம் மீறியதாக ஒரு கண்ணோட்டத்தில் போலீஸ் அணுகும் வேளையில் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் கீழும் தாம் விசாரணை செய்யப்படவிருப்பதாக முன்னாள் மூலப்பொருள் தொழில் துறை அமைச்சராக தெரசா கோக் குறிப்பிட்டார்.
பன்றி இறைச்சி மற்றும் மதுபானம் விற்பனை செய்யப்படாத உணவகங்கள் மற்றும் உணவு விநியோகிப்பு நிறுவனங்களுக்கு ஹலால் சான்றிதழை கட்டாயமாக்கும் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவின் பரிந்துரை குறித்து கருத்து தெரிவித்தற்காக திரேசா கொக் நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு புக்கிட் அமான் போலீசாரால் விசாரணை செய்யப்படவிருக்கிறார்.