கோலாலம்பூர், செப்டம்பர் 10-
சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் Setting முறையில் வங்காளதேசிகளை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் என்று நம்பப்படும் நபரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.
நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான அந்த வங்காளதேசப் பிரஜை, இன்று காலையில் புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, விசாரணைக்கு ஏதுவாக வரும் 16 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை SPRM பெற்றுள்ளது.
விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறை முகப்பிடங்களில் பணியாற்றும் தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அவர்களை வசப்படுத்தி வைத்திருந்ததாக நம்பப்படும் அந்த வங்காளதே ஆடவர், வங்காளதேசத் தொழிலாளர்களை மலேசியாவிற்கு கொண்டு வருவதற்கு விமான நிலையத்தில் செட்டிங் முறையை கையாண்டு வந்ததாக கூறப்படுகிறது.
தாம் கொண்டு வந்த அந்நியத் தொழிலாளர்கள் குறிப்பிட்ட முகப்பிடங்களில் சோதனையின்றி மிக துரிதமாக விமான நிலையத்தை விட்டு வெளியேறுவதற்கு சம்பந்தபட்ட நபர் Setting முறையை மிக சாதுரியமாக ஏற்பாடு செய்து இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதற்கு முகப்பிடங்களில் பணியாற்றும் சம்பந்தப்பட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு 200 வெள்ளி முதல் 25 ஆயிரம் வெள்ளி வரையில் லஞ்சம் கொடுத்து வந்ததாக நம்பப்படுகிறது.
SPRM தொடங்கியுள்ள OP PUMP SPRM சோதனை நடவடிக்கையில் அந்த வங்காளதேச ஆடவர் நேற்று முற்பகல் 1.30 மணியளவில் பிடிபட்டார்.
சம்பந்தப்பட்ட நபர் 2009 SPRM சட்டத்தின் கீழ் பிடிபட்டதை SPRM உளவுப்பிரிவு இயக்குநர் Zainul Darus உறுதிப்படுத்தினார்.