ரவுப் , செப்டம்பர் 10-
பகாங், ரவுப் – கில் உள்ள முசாங் கிங் – டுரியான் பழந்தோட்ட விவசாயிகள், தோட்டத்தில் உள்ள தங்கள் குடில்களுக்கு அமலாக்க அதிகாரிகள் தீயிட்டு சேதப்படுத்தியிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது உண்மையிலேயே மனிதாபிமானமற்ற செயலாகும் என்று தங்கள் குடில்கள் சேதப்படுத்தப்பட்ட காட்சியை கொண்ட காணொளியை செய்தியாளர்களிடம் விவசாயிகள் காட்டினர்.
டுரியான் பழந்தோட்டங்களை பராமரித்தும் வரும் தங்களை, அமலாக்க அதிகாரிகள் மிரட்டும் தோரணையில் செயல்பட்டுள்ளனர். அவர்களின் இந்த செயல், உண்மையிலேயே அதிகார துஷ்பிரயோகமாகும் என்று அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
முசாங் கிங் பழந்தோட்டங்களை பாதுகாக்கும் இயக்கத்தின் தலைவர் வில்சன் சாங் கூறுகையில், உரிமம் இல்லாத டுரியான் தோட்டங்களை வழி நடத்தி வரும் விவசாயிகளின் குடில்களை அமலாக்க அதிகாரிகள் அண்மைய காலமாக தீயிட்டு சேதப்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டினார்.
அமலாக்க அதிகாரிகளின் சில Four Wheel Drive வாகனங்கள் ரவுப், சுங்கை க்ளாவ் -வில் உள்ள டுரியான் தோட்ட விவசாயிகளின் நிலப்பகுதிகளுக்கு சென்றதை தாங்கள் கண்டதாக அவர்கள் முறையிட்டுள்ளனர்.