முகைதீனுக்கு எதிரான 4 குற்றச்சாட்டுகளும் நிலைநிறுத்தம்

புத்ராஜெயா,செப்டம்பர் 11-

நாட்டின் பிரதமராக தாம் பொறுப்பில் இருந்த போது ஜன விபாவா திட்டம் தொடர்பில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள 4 குற்றச்சாட்டுகளையும் புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.

அப்பீல் நீதிமன்றத்தில் ஐவர் கொண்ட நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி அஸிஸா நவாவி,/ பாகோ நாடாளுமன்ற உறுப்பினரான முகைதீனின் மேல்முறையீட்டு விண்ணப்பத்தை நிராகரிப்பதாக தமது தீர்ப்பில் தெரிவித்தார்

அப்பீல் நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பின் மூலம் முகைதீனுக்கு எதிரான நான்கு குற்றவியல் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை மீண்டும் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கிறது.

லஞ்ச ஊழல் தொடர்பில் முகைதீனுக்கு  எதிராக செஷன்ஸ் நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள 4 குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி விடுதலை செய்தது.

எனினும் உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பு, அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இதனை விசாரணை செய்த அப்பீல் நீதிமன்றம், முகைதீனை விடுதலை செய்து இருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ததுடன் அவருக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளும் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

எனினும் இத்தீர்ப்பை, மறுபரிசீலனை செய்யக்கோரி, மீண்டும் அப்பீல் நீதிமன்றத்தில் முகைதீன் செய்து கொண்ட மேல்முறையீடு மீதான விண்ணப்பம், ஐவர் கொண்ட நீதிபதிகள் குழுவினரால் விசாரணை செய்யப்பட்டது.

பூமிபுத்ரா குத்தகையாளர்களை வளப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஜன விபாவா திட்டத்தில் 23 கோடியே 25 லட்சம் வெள்ளியை தவறாக பயன்படுத்தியதாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான முகைதீன் யாசின் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS