ஜார்ஜ் டவுன் , செப்டம்பர் 11-
பினாங்கு மாநிலத்தின் 2024 முதல் 2027 ஆம் ஆண்டு வரைக்குமான டிஏபி உயர்மட்டத் தலைவர்களுக்கான கட்சித் தேர்தல், வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. பினாங்கு மாநில டிஏபி தலைவர் பதவி உட்பட பல்வேறு உயர்மட்டப் பதவிகளை கைப்பற்றுவற்கு 32 பேர் கடும் போட்டியைக் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பினாங்கு மாநில டிஏபி தலைவரும், மாநில முதலமைச்சருமான சோவ் கோன் இயோவ், தமது தலைவர் பதவியை தற்காத்துக்கொள்ள மாநிலத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்ததைத் தொடர்ந்து இம்முறை மாநில டிஏபி தேர்தல் பேராளர்களின் மிகுந்த கவன ஈர்ப்புக்குரிய தேர்தலாக மாறியுள்ளது.
சோவ் கோன் இயோவ், மாநிலத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற போதிலும் பினாங்கு முதலமைச்சர் பதவிக்கான தனது தவணைக்காலத்தை அவர் முழுமையாக நிறைவு செய்வார் என்று கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அடுத்த பினாங்கு முதலமைச்சர் பதவியை குறிவைத்து, இத்தேர்தல் நடைபெறவிருப்பதாக கட்சியின் அணுக்கமான வட்டாரம் தெரிவித்தது. மாநிலத் தேர்தலில் வெற்றிகரமாக தேர்வு செய்யப்படக்கூடிய 15 வேட்பாளர்கள், தங்களுக்குள் ஒருவரை மாநில டிஏபி தலைவராக தேர்வு செய்யவிருக்கின்றனர். மாநில தலைவராக தேர்வு செய்யப்படவிருப்பவரே, கட்சியின் சார்பில் மாநில முதலமைச்சராக தேர்வு செய்யும் நிலை உள்ளது.
டிஏபி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான லிம் குவான் எங், மாநிலத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பினாங்கு மாநில டிஏபி தலைவர் பதவியை கைப்பற்றுவதற்கு புக்கிட் மெர்தாஜம் நாடாளுமன்ற உறுப்பினரும், மனித வள அமைச்சருமான ஸ்டீவன் சிம், / டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங்கின் புதல்வியும், லிம் குவான் எங்கின் சகோதரியுமான தஞ்சோங் எம்.பி.யும், துணை நிதி அமைச்சருமான, Lim Hui Ying, டிஏபி முன்னாள் தலைவர் காலஞ்சென்ற கர்ப்பால் சிங்கின் புதல்வரும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் கர்ப்பால் சிங் ஆகியோர் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவர்களை தவிர ஆட்சிக்குழு உறுப்பினர் ஜைரில் கிர் ஜோஹாரி, இரண்டாவது முதலமைச்சர் ஜக்டீப் சிங் டியோ ஆகியோரும் மாநிலத் தலைவர் பதவிக்கு குறிவைத்துள்ளனர். இதர முக்கிய வேட்பாளர்கள் மாநில செயலவைப்பதவிகளை குறிவைத்துள்ளனர்.
எனினும் மாநில டிஏபி தலைவர் பதவிக்கு குறிவைத்து நடக்கும் இத்தேர்தலில் லிம் கிட் சியாங் மகள் Lim Hui Ying மற்றும் மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் ஆகியோருக்கு இடையில் நடக்கும் பலப்பரீட்சையாகவே இந்த தேர்தல் நோக்கப்படுகிறது.
இருவரும் சட்டமன்ற உறுப்பினராக இல்லை என்பதால் மாநில தேர்தலில் வெற்றி பெற்றாலும் முதலமைச்சராக வர முடியாது. ஆனால், அடுத்தப் பொதுத் தேர்லில் முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவதற்கு இவர்கள் சட்டமன்றத்தில் களம் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பினாங்கு டிஏபி தேர்தலுடன் கூடிய மாநாடு, செப்டம்பர் 22 ஆம் தேதி பயான் பாரு, அரினா செட்டியா ஸ்பைஸ் -யில் நடைபெறவிருக்கிறது.