திரெங்கானு, செப்டம்பர் 11-
போலி முதலீட்டு திட்டத்தில் கவரப்பட்ட
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் தனது வாழ்நாள் சேமிப்புப்பணமான 91 ஆயிரத்து 600 வெள்ளியை இழந்துள்ளார்.
85 வயதான அந்த முதியவர் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி அடையாளம் தெரியாத வாட்ஸ்ஆப் எண்ணில் விளம்பரம் ஒன்றைப் பெற்றதாகக் கோல திரங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்லி முகமது நூர் கூறினார்.
குறுகிய காலத்தில் அதிக லாபத்தை ஈட்டித் தரும் எனக் கூறப்படும் மடீனா ஈமாஸ் திட்டத்தில் முதலீடு செய்ய அந்த முதியவர் ஊக்கவிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
அந்த நபருக்கு விஐபி பிரமுகர்களுக்கான முதலீட்டுத் திட்டத்தில் பங்கு பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 500 வெள்ளியை முதலீடு செய்தால் நான்கே மணி நேரத்தில் 15 ஆயிரத்து 800 வெள்ளியை லாபமாகப் பெற முடியும் எனக் கூறப்பட்டது.
இந்த திட்டத்தில் கிடைக்கக் கூடிய லாபத்தைக் கண்டு மதிமயங்கிப் போன அந்த முதியவர், சம்பந்தப்பட்ட சந்தேக நபர் குறிப்பிட்ட பல்வேறு வங்கிக் கணக்குகளில்
26 பரிவர்த்தனைகள் மூலம் பணத்தை முதலீடு செய்து, மோசம் போனதாக ஏசிபி அஸ்லி குறிப்பிட்டார்.