ஷாங்காய், சீனா, செப்டம்பர் 12-
முஸ்லிம் அல்லாத உணவகங்களுக்கு Halal சான்றிதழை கட்டாயமாக்குவதா? இல்லையா? என்பது குறித்த கொள்கை அளவிலான எந்தவொரு முடிவும் ஆட்சியாளர்கள் மன்றம் முடிவு செய்யும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
எனவே இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தரப்பினரும் தற்போது தாங்கள் பாதிக்கப்பட்டு விட்டதாக உணர வேண்டிய அவசியமில்லை என்று அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.
அதேவேளையில் சர்ச்சைக்கு இடமாகியுள்ள இவ்விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் சற்று அமைதி காக்க வேண்டும் என்று தேசிய ஹலால் மன்றத்தின் தலைவருமான ஜாஹிட் வலியுறுத்தினார்.
உணவகங்கள் Halal சான்றிதழை கொண்டு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவது ஒரு உத்தேச பரிந்துரையே தவிர அது அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள என்று துணைப்பிரதமர் கேட்டுக்கொண்டார்.
இந்த விவகாரத்தை ஆட்சியாளர் மன்றம் தனது அதிகாரத்திற்கு ஏற்ப முடிவு செய்யும் என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.