ஜசெக.வில் உறுப்பினராகுவதற்கு தூண்டில் போடுவதா?

ஈப்போ , செப்டம்பர் 12-

டிஏபி உறுப்பினர்களின் பிள்ளைகள் அரசாங்க உயர்கல்விக்கூடங்களில் பயில்வதற்கு இடம் கிடைக்குமானால், ஒவ்வொரு பிள்ளைக்கும் தலா ஆயிரம் வெள்ளி கல்வி நிதி உதவி வழங்கப்படும் ; அந்த பிள்ளைகள் கட்சியில் புதிய உறுப்பினராக சேர்ந்தால் என்ற நிபந்தனை விதித்து இருக்கும் பேரா மாநில டிஏபி – த் தலைவர் ங்கா கோர் மிங் – கின் அறிவிப்பு குறித்து டிஸ்கே சமூக அமைப்பின் தலைவர் டத்தோ N. சிவகுமார் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்..

தனது கட்சி உறுப்பினர்களின் பிள்ளைகள் உயர்க் கல்விக்கூடங்களில் இடம் கிடைக்கும் பட்சத்தில் ஆயிரம் வெள்ளி கல்வி நிதி வழங்கப்படுவது பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்குரிய செயலாக இருக்கலாம். ஆனால், அவ்வாறு கல்வி நிதி உதவியை பெறக்கூடிய பிள்ளைகள், கட்டாயமாக டிஏபி- யில் உறுப்பினாக சேர வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது ஓர் ஆரோக்கியமான செயல் அல்ல என்று டத்தோ சிவகுமார் வலியுறுத்தினார்.

தங்கள் கட்சியில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு இது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படுவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சிறந்த அடைவு நிலையைப் பெற்று உயர் கல்விக்கூடங்களில் சேரக்கூடிய பிள்ளைகளுக்கு டிஏபி எவ்வித நிபந்தனையின்றி கல்வி நிதி உதவி வழங்குமானால் அதனை தாம் முழுமையாக வரவேற்பதாக டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.

ஆனால், புதிய உறுப்பினருக்கு ஆயிரம் வெள்ளி கல்வி நிதி வழங்கப்படும் என்று அண்மையில் பேரா டிஏபிமாநாட்டில் அதன் தலைவர் ங்கா கோர் மிங்- அறிவித்து இருப்பது, உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்கிறது என்பதுடன் அறவே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

காரணம், டிஏபி ஒரு பல்லினக் கட்சியாகும். அது ஆட்சியில் இருக்கும் பட்சத்தில் அனைத்து சமூகத்தை சேர்ந்த பிள்ளைகளும் இது போன்ற கல்வி நிதி உதவியை பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், கட்சியில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பெருக்குவதற்காக கல்வியை இரையாக பயன்படுத்தி,டிஏபி தூண்டில் போட முயற்சிப்பது ஏற்புடைய செயல் அல்ல என்று டத்தோ சிவகுமார் வலியுறுத்தினார்.

மலேசியர்களின் கவன ஈர்ப்புக்காக கல்வி மீதான உணர்ச்சிகரமான அம்சங்களை அந்த தெலுக் இந்தான் எம்.பி. ஒரு போதும் பயன்படுத்தக்கூடாது. காரணம், இன்று ஆயிரம் வெள்ளி கிடைத்தால், டிஏபி-யில் சேரும் பிள்ளைகள், அந்ததொகைக்கும் கூடுதலாக கிடைத்தால் மற்றொரு கட்சியில் இணையும் நிலை ஏற்படலாம்.

இது கட்சியில் நேர்மையும், விசுவாசமும், நம்பகத்தன்மையும் அற்ற உறுப்பினர்களை சேர்க்க வித்திடுமே தவிர உண்மையான உறுப்பினர்களை உருவாக்க வழிவகுக்காது என்று ங்கா கோர் மிங் – மிற்கு டத்தோ சிவகுமார் அறிவுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS