பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 13-
நெகிரி செம்பிலானிலும் சிலாங்கூரிலும் உள்ள 20 சமூக நல இல்லங்களிலிருந்து 402 பிள்ளைகளை போலீசார் மீட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட பிள்ளைகள் இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், அடி, உதை மற்றும் சூடு வைத்து கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுவது தொடர்பில் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவான JAKIM விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து உணவகங்களும் HALAL சான்றிதழ் பெற வேண்டும் என்று அண்மையில் JAKIM முன்வைத்த பரிந்துரை, பெரும் சர்ச்சையானது என்பது நாடே அறியும்.
இந்நிலையில் இரண்டு மாநிலங்களிலும் உள்ள 20 சமூக நல இல்லங்களில் 17 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்று கூறப்படும் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணையை மேற்கொள்வதிலும், உரிய நடவடிக்கை எடுப்பதிலும் JAKIM முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று அரசாங்க சார்பற்ற மகளிர் அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
சமூக நல இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறார்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, சுரண்டப்படுவது, சித்ரவதை செய்யப்படுவது மற்றும் மதம் சார்ந்த பிரச்னைகள் முதலியவற்றை கையாளுவதற்கு அந்த சமூக நல இல்லங்கள் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று பெர்துபுஹான் ஜெனரசி அஸ்பிராசி பெமிம்பின் வனிதா மலேசியாஎன்ற மகளிர் அமைப்பின் தலைவர் புவான் ஸ்ரீ பீபி ஷர்லிசா முகமது காலித் கேட்டுக்கொண்டுள்ளார்.
Ops Global என்ற பெயரில் கடந்த புதன்கிழமை போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 20 சமூக நல இல்லங்களிலிருந்து 201 ஆண் பிள்ளைகள் மற்றும் 201 பெண் பிள்ளைகள் மீட்கப்பட்டனர்.
17 வயதுக்கு கீழ்பட்ட வயதுடைய பிள்ளைகள் மீட்கப்பட்ட சம்பவத்தில் தனிநபர்கள் கைது செய்யப்பட்டாலும் அவர்களுக்கு எதிராக நடைபெறக்கூடிய விசாரணைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று பீபி ஷர்லிசா கேட்டுக்கொண்டார்.
நெகிரி செம்பிலான் மாநில முன்னாள் மந்திரி பெசாரும், JUASE முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டான்ஸ்ரீ முஹம்மது ஈசா -வின் மனைவியுமான பீபி ஷர்லிசா, இதில் நெகிரி மாநிலத்தில் கோலா பிலா- வில் உள்ள சில சமூக நல இல்லங்களின் பெயர்களும் அடிப்பட்டு இருப்பது கவலை அளிக்கிறது என்றார்.