கெடா ,செப்டம்பர் 13-
ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகளை ஒரு பகடை காயாக பயன்படுத்தி, தாங்கள் கொண்டுள்ள ஸ்தாபக் பிரகடனத்தின் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு டிஏபி முயற்சித்து வருவதாக கெடா மந்திரி பெசார் சனுசி நூர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தில், இடம் பெற்றுள்ள கட்சிகள், திக்குத் தெரியாமல் இருப்பதாக கடும் விமர்சனத்தை முன்வைத்த சனூசி, அரசாங்கத்தை கட்டுப்படுத்துவதில் டிஏபி வெற்றி பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள பிகேர் கட்சிக்கு அதன் போராட்டம் என்னவென்று தெரியவில்லை. அதன் நோக்கமும் தெளிவாக இல்லை. இந்நிலையில்தான் அக்கட்சிகளை டிஏபி தற்போது மேலாதிக்கம் செய்து வருவதாக சனுசி குற்றஞ்சாட்டினார்.
ஆனால், இதில் டிஏபி- யின் போராட்டம் என்ன? என்பதில் அந்த கட்சி மிகத் தெளிவாக இருப்பதாக சனூசி கூறுகிறார்.
ஸ்தாபக் பிரகடனத்தில் உண்மையிலேயே என்ன அறிவிக்கப்ட்டுள்ளது என்பது தங்களுக்கு நன்கு தெரியும் என்று இன்று பகாங், தெமர்லோவில் பாஸ் கட்சியின் 64 ஆவது முஸ்லிமத் கூட்டத்தில் உரையாற்றுகையில் பெரிக்காத்தான் நேஷனலின் தேர்தல் இயக்குநருமான சனுசி இதனை தெரிவித்தார்.
ஸ்தாபக் பிரகடனம் என்பது கடந்த 1967 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டதாகும். ஒரு நாட்டை கட்டியெழுப்பும் முயற்சியில், இனங்களுக்கு இடையிலான சமத்துவத்தை முக்கியமாக வலியுறுத்துகிறது.
நாட்டு மக்களிடையே சமத்துவத்தை விதைக்கும் அதேவேளையில் பூமிபுத்ராக்கள் மற்றும் பூமிபுத்ரா அல்லாதவர்கள் என்ற இரு பிரிவினராக இருப்பதை ஸ்தாபக் பிரகடனம் முற்றாக எதிர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.