குளுவாங் , செப்டம்பர் 14-
ஜோகூர், மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனலுக்கும், பெரிக்காத்தான் நேஷனலுக்கும் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.
குளுவாங், டெவான் துங்கு இப்ராஹிம் இஸ்மாய் மண்டபத்தில் இன்று காலையில் நடைபெற்ற வேட்புமனுத்தாக்கலில், இந்த இடைத்தேர்தலில் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளதாக காலை 10.15 மணியளவில் தேர்தல் நிர்வாக அதிகாரி அசுராவதி வாஹித் தெரிவித்தார்.
வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்த இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் 40 வயது சையத் ஹுசைன் சையத் அப்துல்லா – விற்கும், பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் 61 வயது முகமது ஹைசன் ஜாபர் – க்கும் இடையில் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி அசுராவதி வாஹித் அறிவித்தார்.
முன்னதாக, வேட்புமனுத்தாக்கலின் போது பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் ஆதரவாளர்கள் தங்கள் கட்சி கொடிகளை ஏந்திக்கொண்டும், கோஷம் எழுப்பிக்கொண்டும் தத்தம் வேட்பாளர்களுடன் புடை சூழ தேர்தல் வேட்புமனுத்தாக்கல் மையத்திற்கு வந்தனர்.
இன்று முதல் 14 நாட்களுக்கு இடைத் தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் வேளையில் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி முன்னிரவு 11.59 மணியுடன் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று இரு கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தினார்.