ஹாங்காங்,செப்டம்பர் 14-
ஹாங்காங், பொது பூப்பந்து போட்டியின், மகளிர் இரட்டையர் இறுதிச் சுற்றில் வெற்றியாளர் பட்டத்தை கைப்பற்றியது மூலம் மலேசியாவின் தேசிய மகளிர் பிரிவு இணையரான பேர்லி தன் – தினா, தங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்..
ஹாங்காங் கொலிசியம், கவுலூன் - னில் இன்று நடைபெற்ற ஹாங்காங் பொது பூப்பந்து போட்டியின் வெற்றியாளர் பட்டத்தை வெல்வதற்கு மலேசியாவின் பேர்லி தன் - தினா இணையருக்கு 38 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டன.
உலக தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள சீனாவின் Liu Sheng Shu – Tan Ning ஜோடியை 21-14, 21-14 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்திய பேர்லி தன் – தினா இணையருக்கு இந்த பருவத்தில் கிடைத்த முதல் இரட்டையர் பட்டம் இதுவாகும்.
உலகத் தரவரிசையில் எட்டாவது இடத்தில் இருக்கும் பேர்லி தன் – தினா ஜோடி இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் மிகத் தீவிரமான ஆட்ட பாணியை வெளிப்படுத்தினர். இதனால் ஏற்பட்ட முட்டுக்கட்டை காரணமாக எதிரணியினர் பல எளிய தவறுகளைச் செய்தனர்.
இந்த வெற்றியானது, கடந்த இரண்டு ஆண்டுகளாக அகில உலக சம்மேளனத்தின், சவால் மிகந்த உலக பூப்பந்துப் போட்டியில், தேசிய ஜோடி எதிர்நோக்கி வந்த வறட்சியான சூழலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
ஆகக் கடைசியாக 2022 பிரெஞ்சு பொது பூப்பந்துப் போட்டியில் பேர்லி தன் – தினா இணையர் பட்டத்தை வென்றனர்.