ஷா ஆலம், செப்டம்பர் 17-
பாஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் சூதாட்ட மையங்களை மூடப்போவதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு, ஓர் அரசியல் சித்து விளையாட்டாகும் என்று அமானா கட்சியின் பொதுச் செயலாளர் முஹம்மது ஃபைஸ் ஃபட்சில் தெரிவித்தார்.
இஸ்லாத்தின் கோட்பாட்டின் கீழ் சூதாட்டம் என்பது ஒரு சட்டவிரோத செயலாகும். ஆனால், பாஸ் கட்சி, ஆட்சியில் இருந்த போதுதான், வெறும் 8 ஆக இருந்த லாட்டரி சீட்டு சிறப்பு குலுக்களின் எண்ணிக்கை , 22 ஆக ஆதிகரிக்கப்பட்டது என்பதை முஹம்மது ஃபைஸ் சுட்டிக்காட்டினார்.
லாட்டரி சீட்டு சிறப்பு குலுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது குறித்து பாஸ் கடசி மறந்து இருக்கலாம். அல்லது மறந்ததைப் போல நடிக்கலாம். ஆனால், நடப்பு உண்மையை அது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முஹம்மது ஃபைஸ் வலியுறுத்தியுள்ளார்.
சூதாட்ட மையங்களை மூடுவதற்கு பாஸ் கட்சி முனைப்பு காட்டுவதைக் காட்டிலும் தாம் ஆட்சி செய்து வரும் மாநிலங்களில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்காரம் உட்பட இதர குற்றச்செயல்களின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து அந்த மத வாத கட்சி ஆராய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.