கோலாலம்பூர், செப்டம்பர் 17-
குரங்கம்மை நோய் தொடர்பில் மலேசியா முதலாவது சம்பவத்தை நேற்று பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குரங்கம்மை நோயாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 58 சம்பவங்களில் ஒருவருக்கு குரங்கம்மை நோய் கண்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் முஹம்மது ரட்ஸி அபு ஹாசன் தெரிவித்தார்.
உள்ளூரைச் சேர்ந்த அந்த ஆடவர் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் காய்ச்சல், தொண்டை வலி, இருமல் போன்ற உபாதைகளுக்கு ஆளாகி வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 21 நாட்களில் அந்த நபர், எந்தவொரு வெளிநாட்டிற்கும் சென்றதில்லை என்பது தெரியவந்துள்ளது. அவர் தற்போது தனிமைப்படுத்துப்பட்டுள்ளதாகவும், உடல் நிலை சீராக இருப்பதாகவும் டாக்டர் முஹம்மது ரட்ஸி தெரிவித்தார்.