புத்ராஜெயா,செப்டம்பர்18-
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு செம்பனைத் தோட்டம் ஒன்றில் தோட்டப்பாட்டாளி ஒருவரை வெட்டி கொலைக் செய்த குற்றத்திற்காக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு ஆடவர்களுக்கான தண்டனையை புத்ராஜெயா, கூட்டரசு நீதிமன்றம் சிறைத்தண்டனையாக மாற்றம் செய்துள்ளது.
47 வயது A. ரமேஷ் மற்றும் 46 வயது ட்யூ சீவ் கெம் என்ற அந்த இரு நபர்களுக்கும் விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்து செய்த மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டத்தோ ஹர்மிந்தர் சிங் தலிவால் , 30 ஆண்டு சிறையும், 12 பிரம்படித் தண்டனையும் விதிப்பதாக தீர்ப்பளித்தார்.
அதேவேளையில் அந்த இருவருக்கும் ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் விதித்த குற்றத் தீர்ப்பை நிலைநிறுத்துவதாக நீதிபதி குறிப்பிட்டார்.
இன்னும் பிடிபடாமல் இருக்கும் ஒரு நபருடன் கூட்டாக சேர்ந்து ரமேசும், / ட்யூ சீவ் கெம் – மும் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் கோலசிலாங்கூர், ஜாலான் ரவாங், பெஸ்டாரி ஜெயா – வில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் தோட்டப் பாட்டாளி A. ஆறுமுகத்திற்கு மரணம் விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் தூக்குத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இருவரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.