ஷா ஆலம், செப்டம்பர் 18-
தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த பெண் மருத்துவ நிபுணர் ஒருவர், சபா, லஹாட் டத்து மருத்துவமனையில் பணியாற்றி வந்த நிலையில், தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவத்தில் அவர், பகடிவதைக்கு ஆளாகியுள்ளார் என்பதற்கு ஆதாரங்களைப் பொறுத்தே அவரின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை முடிவு செய்ய இயலும் என்று வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேல் நிலை அதிகாரிகளால் அந்த பெண் மருத்துவ நிபுணர் பகடிவதைக்கு ஆளாகியுள்ளார் என்று கூறப்பட்டாலும் அதற்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே இவ்வழக்கை எந்த சட்டத்தின் கீழ் முன்னெடுக்க முடியும் என்பதை தீர்மானிக்க இயலும் என்று வழக்கறிஞர் முகமது அக்ரம் அப்துல் அஜீஸ் தெரிவத்தார்.
அந்த மருத்துவர், பகடிவதை மற்றும் மன அலுத்தத்தின் காரணமாக உயிரை மாய்த்துக்கொண்டு இருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களின் வாயிலாக குற்றஞ்சாட்டுவது மிக எளிதாகும். ஆனால், அதற்கான ஆதாரங்களை நிரூபிப்பது என்பது எளிதான காரியம் அல்ல என்று அந்த சட்ட வல்லுநர் கூறுகிறார்.
டாக்டர் டே டியென் யா என்ற அந்த பெண் மருத்துவ நிபுணர் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்ததற்கு பணியிடத்தில் நடந்த பகடிவதையே காரணம் என்று அவரின் சகோதரர் கூறியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் அந்த வழக்கிறஞர் எதிர்வினையாற்றியுள்ளார்.