உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க வேண்டும்
கோலாலம்பூர், செப்டம்பர் 20-
STPM தேர்வில் 4.0 CGPA மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் 12 உள்ளூர் பட்டப்படிப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது குறித்து மலாயாப் பல்கலைக்கழகத்தின் புதிய இளையோர் சங்கமான UMANY ( உமானி ) கேள்வி எழுப்பியுள்ளது.
சம்பந்தப்பட்ட பட்டப்படிப்புகளுக்கு போதுமான தகுதியை கொண்டு இருந்த மாணவர்களுக்கு அந்த பட்டப்படிப்பிற்கான அனுமதி மறுக்கப்பட்டது குறித்து உயர் கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு போர்க்கொடி தூக்கியுள்ளது.
STPM தேர்வில் சிறந்த அடைவு நிலையைக் கொண்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்ளின் சேர்ப்பில் உரிய அங்கீகாரத்தையும், நன்மதிப்பையும் வழங்க மறுப்பது அரசாங்க பொதுப் பல்கலைக்கழகளில் மாணவர் சேர்ப்பு முறையில் கையாளப்படும் அணுகுமுறையின் பலவீனத்தை காட்டுகிறது என்று அந்த அமைப்பின் தலைவர் லிம் ஜிங் ஜெட் வினவியுள்ளார்.
தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு இடம் இல்லையென்றால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்கள், யாருக்கு சென்றடைந்துள்ளன என்று அவர் கேள்வி எழுப்பினார்.
ஆற்றலும், திறமையும் கொண்ட உரிய மதிப்பெண்களை கொண்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழங்களில் இடம் கிடைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றால் அதற்கான நியாயமான காரணங்களை உயர்கல்வி அமைச்சு, பொது மக்களுக்கு விளக்க வேண்டும் என்று கோலாலம்பூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தில் இடம் கிடைப்பதற்கு முந்தைய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நியாயமான சேர்க்கை செயல்முறையை உறுதி செய்வதற்கு பல்லைக்கழகத்தின் மத்திய பிரிவான யு.பி.யு விண்ணப்ப முறையின் கீழ் வெளிப்படையான அளவுகோல் மற்றும் செயல்முறையை அமல்படுத்தப்பட வேண்டும் என்று தாங்கள் கோரிக்கை விடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கோ சியாங் யீ என்ற மாணவனின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது மூலம் விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதில் நியாயமான முறை கடைப்பிடிக்கப்படவில்லை என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.