பூச்சோங் , செப்டம்பர் 20-
ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்கு ஓர் அமைச்சின் 68 உயர் அதிகாரிகள் மேற்கொள்ளவிருந்த பயணத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ரத்து செய்துள்ளார்.
விமான டிக்கெட், தங்கும் இடம் உட்பட அனைத்து ஏற்பாடுகளும் முன் உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த 68 அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணத்தை பிரதமர் ரத்து செய்துள்ளார்.
பெர்லினின் அரசாங்க அலுவலகப் பணிகளை மேற்கொள்வததற்கு மிகச்சிறிய எண்ணிக்கையில் மட்டுமே அரசுப்பணியாளர்கள் தேவை. ஆனால், மிகப்பெரிய பட்டாளமே அனுப்பப்படுவதை கண்டு அது தேவையற்றது என்று பிரதமர் முடிவு செய்துள்ளார்.
இது போன்ற பயணங்களுக்கு அரசாங்கப் பணம் அதிகமாக செலவிடப்படுவதையும், விரயத்தை தடுக்கவும் ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் இந்த கடும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.