பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 21-
நாட்டின் தேசிய மிருகக்காட்சி சாலையான ஜூ நெகரா-வின் முன்னாள் தலைமை கால்நடை மருத்துவர் டாக்டர் வெள்ளையன் சுப்பிரமணியம் காலமானார். அவருக்கு வயது 72.
திடீர் மாரடைப்பினால் இன்று சனிக்கிழமை அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூர், ஜாலான் உலு கிள்ளானில் உள்ள தேசிய மிருகக்காட்சி சாலையில் தமது 28 வயதில் கால்நடை மருத்துவராக பணியாற்றத் தொடங்கிய டாக்டர் வெள்ளையன், மிருகக்கட்சி சாலையில் மிக நீண்ட காலமாக சேவையாற்றியதற்காக மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று இருந்தார்.
மிருகங்களையும், பறவைகளையும், ஊர்வனங்களையும் தனது நண்பர்களைப் போல் இமைகாத்து வந்தவரான டாக்டர் வெள்ளையன, மலேசியாவின் மிருகக்கட்சி சாலையின் தரத்தை அனைத்துலக தரத்திற்கு உயர்த்தியப் பெருமை அவரையே சாரும்.
மிக உயர்தரமான கால்நடை மருத்துவமனை, ஜூ நெகரா-வில் உருவாவதற்கு டாக்டர் வெள்ளையனே முக்கிய காரணமாகும்.
கால்நடைத்துறையில் இணைப் பேராசிரியரான டாக்டர் வெள்ளையன், மலேசியா மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களின் இளங்கலை மாணவர்களுக்கு உயிரியல் பூங்கா துறை தொடர்பாக நேரடி பயிற்சி அளித்த பெருமையும் அவரையே சாரும்.
வெள்ளையனின் ஆற்றல், மிருகங்கள் மீது அவர் கொண்டிருந்த பாசப்பிணைப்பு மற்றும் ஜூ நெகரா சார்பில் மலேசிய கால்நடை மருத்துவர் சங்கத்தில் அவர் ஆற்றிய பணிகள் அனைத்தும் காலத்தால் போற்றப்படும் என்று மலேசிய விலங்கியல் சங்கத்தின் முதலாவது தலைவரும், 1963 ஆம் ஆண்டு ஜூ நெகரா தோற்றுவிக்கப்பட்ட போது அதன் முதலாவது தலைவாராக பொறுப்பேற்றவரான காலஞ்சென்ற டான் ஸ்ரீ வி.எம். ஹட்சன் வர்ணித்து இருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது.