விமான நிலையத்தின் செட்டிங் முறை / பெரிய தலை சிக்கியது

ஷா ஆலம், செப்டம்பர் 21-

சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறை முகப்பிடங்களில் அந்நிய நாட்டவர்கள் சோதனையின்றி நாட்டிற்குள் நுழைவதற்கு செட்டிங் முகப்பிடங்களில் நிகழ்ந்த மிகப்பெரிய ஊழல் மோசடிக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக நம்பப்படும் பெரிய தலை சிக்கியுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் வட்டாரம் தெரிவித்துள்ளது.

குடிநுழைவுத்துறை அதிகாரிகளை தன்வசமாக்கிக் கொண்டு செட்டிங் முகப்பிடங்கள் உருவாகுவதற்கு காரணகர்தாவாக இருந்தவர் என்று நம்பப்படும் உள்ளூரைச் சேர்ந்த அந்த நபரை, நெகிரி செம்பிலான் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் கடந்த புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

40 வயது மதிக்கத்தக்க அந்த நபர், சிரம்பான் சிவில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, செப்டம்பர் 23 ஆம் தேதி வரையில் தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணையை எஸ்பிஆர்எம் பெற்றுள்ளது.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் KLIA1 மற்றும் KLIA 2 ஆகிய முனையங்களின் வாயிலாக அந்நிய நாட்டவர்கள் எவ்வித சோதனையின்றி மிக சுலபமாக நுழைவதற்கு உள்ளூர் ஏஜெண்டுகளுக்கு அந்த நபர் வலது கரமாக விளங்கியுள்ளார் என்று எஸ்பிஆர்எம் வட்டாரம் தெரிவித்துள்ளது.

விசாரணைக்கு ஏதுவாக அந்த சந்தேகப் பேர்வழி, சிலாங்கூர் எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

சம்பந்தப்பட்ட நபர் பிடிபட்டு இருப்பதை எஸ்பிஆர்எம் சிலாங்கூர் மாநில இயக்குநர் டத்தோ அலியாஸ் சலீம்உறுதிப்படுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS