கோலாலம்பூர், செப்டம்பர் 23-
கார் ஒன்றிலிருந்து ஜன்னலின் வழி தூக்கி வீசப்பட்ட குப்பையால் ஆத்திரமடைந்த ஆடவர் ஒருவர் கூர்மையான கத்தியை ஏந்திய நிலையில் வாகன மோட்டிகளுடன் கலவரத்தில் ஈடுபட்டதால் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஆடவர் ஒருவர் கத்தியை ஏந்திக் கொண்டு சாலையில் நின்ற காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாக கோலலங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் அஹ்மத் ரித்வான் முகமது நோர் கூறினார்
இச்சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் தாங்கள் புகார் ஒன்றை பெற்றதாக அவர் சொன்னார் .
தெலோக் பங்லிமா கரங் அருகில் நிகழ்ந்த இந்த கலவரம் தொடர்பில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கூர்மையான கத்தியுடன் நின்று கொண்டிருந்த ஆடவரை கைது செய்தனர்.
அதன் பின்னர் மற்றொரு 23 வயதுமிக்க இளைஞர் உட்பட 23,24 வயதுடைய இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்ததாக அவர் சொன்னார் .
இச்சம்பவம் 1958 ஆம் ஆண்டு சுடும் ஆயுதச் சட்டத்தின் பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.