புத்ராஜெயா,செப்டம்பர் 23-
தொடக்கப்பள்ளிகளில் ஆறாம் ஆண்டு அரசாங்க மதிப்பீட்டுத் தேர்வான UPSR மற்றும் இடைநிலைப்பள்ளிகளில் மூன்றாம் படிவத்திற்கான PT3 தேர்வு ரத்து செய்யப்பட்ட முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
அந்த இரண்டு தேர்வுகளும் மறுபடியும் கொண்டு வரப்படாது. இவ்விவகாரத்தில் அரசாங்கம் எடுத்துள்ள முடிவு தீர்க்கமானதாகும் என்று Fadhlina Sidek குறிப்பிட்டார்.
தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளிகளில் மாணவர்களின் கல்வி அடைவு நிலையை மதிப்பீடு செய்யும் அரசாங்கத்தின் முக்கியத் தேர்வாக இருந்து வரும் UPSR மற்றும் PT 3 ஆகிய தேர்வுகள் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என்று பெற்றோர்கள் உட்பட கல்விமான்கள் பலர் வலியுறுத்தி வருவது தொடர்பில் அமைச்சர் ஃபத்லினா சிடெக் எதிர்வினையாற்றினார்.
மலேசியாவின் கல்வித் தரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக கடந்த 2022 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட அந்த இரண்டு முக்கியத் தேர்வுகளும் மறுபடியும் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற முன்னாள் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மஹத்ஸீர் காலிட் – அண்மையில் கல்வி அமைச்சைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
எனினும் அந்த இரு தேர்வுகளையும் மறுபடியும் அமல்படுத்தும் உத்தேசம், கல்வி அமைச்சுக்கு இல்லை. மாறாக 2027 ஆம் ஆண்டு பள்ளி பாடத்திட்டம் மற்றும் புதிய கல்வி மேம்பாட்டுத்திட்டம் ஆகியவற்றில் கல்வி அமைச்சு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.