நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை – அமிதாப் முதல் ரஜினி, விஜய் வரை நட்சத்திரங்கள் அமைதி காப்பது ஏன்?

செப்டம்பர் 24-

கேரளாவில் வெளியிடப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பொழுதுபோக்கு துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அறிக்கையில் மலையாள திரைத்துறையில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விரிவான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மற்ற பெண் கலைஞர்கள் அரவணைப்பையும் ஆதரவையும் வழங்க, இந்திய திரைத்துறையில் உள்ள சூப்பர்ஸ்டார்கள் இந்த விவகாரத்தில் மௌனமாக இருந்து வருகின்றனர்.

மலையாள திரைத்துறையில் பணியாற்றிய 51 பெண் கலைஞர்களின் அனுபவங்களுடன், பல ஆண்டு காலமாக பெண்கள் எதிர்கொண்டு வரும் பாலியல் சுரண்டலை வெளிச்சப்படுத்தியுள்ளது ஹேமா கமிட்டியின் அறிக்கை.

“கேட்கப்படும் நேரத்தில் பாலுறவுக்கு பெண்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் வேலை வேண்டும் பட்சத்தில் தொடர் ‘சமரசத்திற்கு’ தயாராக இருக்க வேண்டும் என்றும் பெண் கலைஞர்களிடம் கூறப்பட்டது” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

முன்வந்து பேசும் பாதிக்கப்பட்ட பெண்கள்

2017-ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பிறகு, மலையாள திரையுலகில் பணியாற்றும் பெண்கள் ஒன்றாக இணைந்து வுமென் இன் சினிமா கலெக்டிவ் (WCC) என்ற கூட்டமைப்பை உருவாக்கினார்கள்.

WCC-ன் வேண்டுகோளுக்கு இணங்க கேரள அரசு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி ஒன்றை அமைத்தது. மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அடையாளம் காணவும் அவர்களுக்கு நீதி வழங்கவும் இந்த குழு அமைக்கப்பட்டது.

பிரச்னைகள் குறித்து பேசிய பெண்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டு 290 பக்கங்களைக் கொண்ட அறிக்கை கடந்த மாதம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டது.

ஆகஸ்ட் 19-ஆம் தேதி அன்று இந்த அறிக்கை வெளியான பிறகு, பல பெண்கள் தாங்கள் மலையாள சினிமாவில் எதிர்கொண்ட பாலியல் சீண்டல்கள் மற்றும் துன்புறுத்தல்களை தாமாக முன்வந்து பகிர்ந்து கொண்டனர். பத்துக்கும் மேற்பட்ட நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

வழக்குகளை விசாரிக்க கேரள அரசு சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. இது மட்டுமின்றி, நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவகாரங்களையும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மலையாள சினிமா மட்டுமின்றி, இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட இந்திய சினிமாவில் உள்ள பெண்கள் இதுபோன்ற சவால்களை எதிர்கொள்வதாக தொடர்ச்சியாக புகார்களை முன்வைத்து வருகின்றனர். படங்களில் வாய்ப்பு கிடைக்க பாலியல் ரீதியான சமரசங்கள் செய்து கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தங்கள் எழுவதை முக்கிய சவாலாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

திரை விமர்சகரும் எழுத்தாளருமான சுப்ரா குப்தா பிபிசியிடம் பேசிய போது, “இந்த போக்கு இந்திய சினிமாவில் வேரூன்றி இருக்கிறது. இது போன்ற பிரச்னையை எதிர்கொள்ளாத ஒரு நடிகையும் இந்த துறையில் இல்லை,” என்று கூறுகிறார்.

யாரேனும் புகார் அளிக்க நினைத்தால், அந்த விசாரணை பல ஆண்டுகளாக நீடிக்கும் என்று கூறினார்.

WCC-யின் உறுப்பினரான தீதி தாமோதரன் பிபிசியிடம் பேசிய போது, “இந்த போக்கு தலைப்பு செய்திகள் ஆனது. தொலைக்காட்சியில் விவாத பொருளானது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,” என்று கூறினார்.

இது போன்ற இன்னல்களை சந்தித்ததன் காரணத்தினால், எவ்வாறு சினிமா துறையில் இருந்து வெளியேறினோம் என்று தற்போது பல பெண்களும் முன்வந்து பேசுகின்றனர். தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை நிரூபிக்க ஆதாரங்கள் ஏதும் இல்லை. சமூக வலைதளங்களில் அவர்கள் குறித்து அவதூறு கருத்துகள் பேசப்பட்டாலும் கூட, அவர்கள் தங்களுக்கு நடந்த நிகழ்வுகளை தைரியமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அண்டை மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்திய அறிக்கை

நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியீடு தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மற்றும் கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருக்கும் திரைத்துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு திரைத்துறையில் நடக்கும் விவகாரங்கள் குறித்து அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தெலுங்கானா அரசுக்கு அழுத்தம் தரப்பட்டு வருகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தெலுங்கானா அரசு தெலுங்கு திரையுலகில் நிலவும் பாலியல் சீண்டல்கள் மற்றும் பணிச்சூழல் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்ட குழு ஒன்றை அறிவித்தது. அதன் அறிக்கையை அந்த குழு 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ஆம் தேதி அரசிடம் சமர்பித்தது. அதனை தெலுங்கானா அரசு இதுவரை வெளியிடவில்லை.

2018ம் ஆண்டு, அறிமுக நடிகையான ஶ்ரீ ரெட்டி பெண்களுக்கு திரையுலகில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க பொது இடத்தில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேற்கு வங்க அரசும் இதுபோன்று ஒரு குழுவை அமைத்துள்ளது என்று கூறுகிறார் நடிகை ரீதாபாரி சக்கரவர்த்தி. திரைத்துறையை மோசமான ஆண்களின் பிடியில் இருந்து இந்த குழு விடுவிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2008ம் ஆண்டு நடிகை தனுஶ்ரீ தத்தா படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ஒருவர் தவறாக நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டினார்

வெளிச்சத்திற்கு வந்த மலையாள சினிமாவின் அவலம்

தமிழ், கன்னட திரைத்துறையில் பணியாற்றும் பெண்கள் பணியிட பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்தந்த மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

பிரபல தமிழ் நடிகையான ராதிகா சரத்குமார் பிபிசியிடம் பேசிய போது, “ஹேமா கமிட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இது ஆண்களுக்கும் பாதுகாப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க தற்போது சினிமாத்துறையில் உள்ள பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்,” என்று குறிப்பிட்டார்.

WCC-யின் உறுப்பினரான தீதி தாமோதரன் இது குறித்து பேசும் போது, சினிமாத்துறையில் உள்ள ஆண்களிடம் இருந்து எந்தவிதமான ஆதரவும் இதுவரை கிடைக்காதது குறித்து வருத்தம் தெரிவித்தார்.

மலையாள சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்மூட்டி இருவரும் இந்த அறிக்கையை வரவேற்று உள்ளனர். ஆனால் குற்றச்சாட்டுகள் மீதான நடவடிக்கைகள் சினிமாத்துறைக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறியதாக தெரியவருகிறது.

தீதி பிபிசியிடம் பேசும் போது, “இந்த நடிகர்களை நாம் அளவுக்கு அதிகமாக நேசிக்கின்றோம். ஆனால் இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக மாறி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்,” என்று கூறினார்.

தமிழ் நடிகர்களும் அரசியல் தலைவர்களுமான கமல் ஹாசன் மற்றும் விஜய் இந்த விவகாரத்தில் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிக்கை வெளிவந்து 10 நாட்கள் ஆன பிறகு பேசிய போதும் கூட, “அதுகுறித்து எனக்கு தெரியாது” என்று கூறியது பெரும் விமர்சனத்திற்கு வழிவகை செய்தது.

ராதிகா மேற்கொண்டு பேசும் போது, “நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தனிப்பட்ட வாழ்க்கையில் சீண்டல்களை எதிர்கொண்டு வருகிறோம். ஆண்கள் இதனை ஏன் கண்டும் காணாமல் இருக்கின்றனர் என்று எனக்கு தெரியவில்லை. அவர்களுக்கும் நடக்கின்ற நிகழ்வுகளுக்கும் தொடர்பில்லை என்று ஒதுக்கிவிடுகிறார்களா? அனைத்து நேரங்களிலும் பெண்களே பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டுமா? இது மிகவும் மோசம்,” என்று கூறினார்.

மலையாள சூப்பர் ஸ்டார்கள் இந்த அறிக்கையை வரவேற்றாலும் இது கலைத்துறையை பாதிக்கும் என்று கருத்து கூறியுள்ளனர்

அமைதி காக்கும் பாலிவுட் நட்சத்திரங்கள்

அமிதாப் பச்சன், ஷாருக் கான், சல்மான் கான், ஆமிர் கான், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பிரபல பாலிவுட் நட்சத்திரங்களும் இது குறித்து அமைதியாக இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சுப்ரா இது குறித்து பேசும் போது,”அமைதி காப்பது மிகவும் மோசமானது. ஆனால் இது தான் நடக்கும் என்று எதிர்பார்த்தது தான். அவர்கள் இந்த விவகாரத்தில் ஏதேனும் பேசியிருந்தால்தான் நான் ஆச்சரியப்பட்டிருப்பேன். ஏன் என்றால் 2008ம் ஆண்டு நடிகை தனுஶ்ரீ தத்தா படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ஒருவர் தவறாக நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டினார். பாலிவுட்டில் மீடூ இயக்கம் ஆரம்பித்த பிறகு இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் அதன் பின்னர் நடந்தது என்ன என்பது நமக்கு தெரியும்,” என்றார்.

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து அறிவித்தது கேரள அரசு

“பாலிவுட் நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து இதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் சிறிது காலம் கழித்து அனைத்தும் இயல்பு நிலைக்கு வந்துவிட்டது. குற்றம்சாட்டப்பட்ட நடிகர்களும் எதுவுமே நடக்காதது போன்று திரைத்துறையில் மீண்டும் நடிக்க வந்துவிட்டனர். ஆனால் குற்றம் சாட்டிய நடிகைகளுக்கு வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை,” என்று கூறினார்.

“இதுவரை பாலிவுட்டில் நடைபெறும் பாலியல் சீண்டல்கள் குறித்து எந்த ஒரு முன்னணி நடிகையும் பேசவில்லை. நடிகை தனுஶ்ரீ தத்தா இதுபோன்ற அறிக்கையால் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை தேவையற்றது என்றும் கூறினார்,” என்றும் மேற்கோள் காட்டினார் சுப்ரா.

“இதைப் பற்றி பேசி கஷ்டப்படுவதை விட, இதில் விழுந்துவிடாமல் இருப்பது நல்லது என்று திரைத்துறையினர் நினைக்கின்றனர். இந்த துறையில் வேலை கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயமும் இருக்கலாம்,” என்றும் குறிப்பிடுகிறார் சுப்ரா.

“சகிப்புத்தன்மை குறித்து பேசிய ஆமீர் கான், ஷாருக் கான் நிலை என்ன ஆனது என்று யோசியுங்கள். தீவிரமான எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது,” என்றும் கூறினார் சுப்ரா.

அறிக்கையால் ஏற்பட உள்ள மாற்றம் குறித்து WCC-யின் உறுப்பினரான தீதி தாமோதரன் நம்பிக்கையுடன் இருக்கிறார். “இது நம்பிக்கை அளிக்கிறது. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவின் சினிமாத் துறையில் பாலின பாகுபாடு வேரூன்றி கிடக்கிறது. ஆனால் இனியும் பெண்கள் இதுபோன்ற பிரச்னைகளை பணியிடங்களில் எதிர்கொள்வதை சகித்துக் கொள்ள இயலாது. இதனை மாற்றும் நோக்கத்துடன் செயல்படுகிறோம் என்றும்,” கூறினார் தீதி.

WATCH OUR LATEST NEWS