ஷா ஆலம், செப்டம்பர் 24-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் முகப்பிடங்களில் நிலவி வந்த செட்டிங் லஞ்ச ஊழல் மோசடிகளை தடுப்பதற்கு விமான நிலையத்திலேயே எஸ்பிஆர்எம் கிளை அலுவலகத்தை தோற்றுவிக்கும் பரிந்துரைக்கு பரவலாக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த பரிந்துரையின் அமலாக்கத்தை எஸ்பிஆர்எம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கெடா மாநில லஞ்சத்துடைத்தொழிப்பு அமைப்பின் உச்சமன்ற உறுப்பினர் முகமது சியாஹிர் இஸ்மாய்ல் கேட்டுக்கொண்டார்.
விமான நிலையத்தில் எஸ்பிஆர்எம் அலுவலகம் திறக்கப்படுவது மூலம் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் உட்பட அமலாக்க நடவடிக்கையில் ஈடுபடுகின்ற அரசுப் பணியாளர்கள் மத்தியில் லஞ்சம் ஊடூருவாமல் தடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையத்தில் அந்நிய நாட்டவர்கள், சோதனையின்றி செட்டிங் முகப்பிடங்கள் வாயிலாக நாட்டிற்குள் நுழைவதை தடுக்கவும், குடிநுழைவு அதிகாரிகள் மத்தியில் லஞ்சத்தை துடைத்தொழிப்பதற்கும் ஏதுவாக விமான நிலையத்தில் எஸ்பிஆர்எம் கிளை அலுவலகத்தை திறப்பது குறித்து பரிசீலிக்க தயாராக இருப்பதாக அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்து இருப்பது தொடர்பில் கமது சியாஹிர் இஸ்மாய்ல் எதிர்வினையாற்றினார்.