சிங்கப்பூர்,செப்டம்பர் 24-
சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் S. ஈஸ்வரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தன்மை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து தம்மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாக அரசு ஊழியர் பதவி வகித்தபோது விலை மதிப்புள்ள பொருள்களை அன்பளிப்பாகப் பெற்றுகொண்டதாக ஈஸ்வரன் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
விசாரணைக்கு இடையூறு விளைவித்தது தொடர்பாகவும் அவர் மீது ஒரு குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. இந்த ஐந்து குற்றச்சாட்டுகளையும் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன், சிங்கப்பூர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூரில் போக்குவரத்து அமைச்சர் பதவி வகித்த போது சிங்கப்பூர் பணமான 4 லட்சம் வெள்ளிக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை ஈஸவரன் அன்பளிப்பாகப் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. அவருக்கு எதிரான வழக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று காலை 10.00 மணிக்கு தொடங்கியது.
62 வயது ஈஸ்வரனுக்கு எதிராக இவ்வாண்டு முற்பகுதியில் ஊழல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சிங்கப்பூர் வரலாற்றில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு லஞ்ச ஊழல் வழக்கு விசாரணையை எதிர்நோக்கும் முதல் அரசியல் தலைவர் ஈஸ்வரன் என்பது குறிப்பிட்டத்தக்கது.