மலாக்கா ,செப்டம்பர் 24-
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சத்து 33 ஆயிரம் வெள்ளியை லஞ்சமாக பெற்ற குற்றத்திற்காக Pos Malaysia Berhad- டின் போக்குவரத்து நிர்வாக திட்டமிடல் பிரிவு முன்னாள் தலைவருக்கு மலாக்கா, அயர் கெரோஹ் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று ஒரு லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
நீதிபதி எலசபெட் பய வான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட 45 வயது ஹஸ்ரி மொக்தார் என்ற அதிகாரி, தனக்கு எதிரான 17 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அந்த முன்னாள் அதிகாரி, கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை மலாக்கா தெங்கா மாவட்டத்திற்கு உட்பட்ட இடங்களில் 17 பரிவர்த்தனைகளின் கீழ் இக்குற்றங்களை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை அல்லது அபராதம் விதிக்க வகை செய்யும் 2009 ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சட்டத்தின் கீழ் அந்த முன்னாள் அஞ்சலக அதிகாரி குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.