விமான நிலைய செட்டிங் முகப்பிட மோசடிகளுக்கு / சுற்றுலா விசா துஷ்பிரயோகமே மூலக் காரணமாகும்

கோலாலம்பூர், செப்டம்பர் 24-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய முகப்பிடங்களில் நிலவி வந்த செட்டிங் லஞ்ச ஊழல் மோசடி சம்பவங்களுக்கு சுற்றுலா விசாவை அந்நிய நாட்டவர்கள் தவறாக பயன்படுத்தியதே முக்கிய காரணமாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

சுற்றுலா விசாவை துஷ்பிரயோகம் செய்ததன் விளைவாக KLIA விமான நிலையத்தில் முறையான குடிநுழைவு சோதனைக்கு உட்படுத்தப்படாமல் வெளிநாட்டினரை அழைத்து வரும் கும்பல்கள் உருவாகுவதற்கு வழிவகுத்துள்ளன என்று SPRM வட்டாரம் கூறுகிறது.

வெளிநாட்டுப் பிரஜைகள் பலர் , குறிப்பாக வங்காளதேசம், நேபாளம் மற்றும் மியான்மர் முதலிய நாடுகளில் இருந்து சுற்றுலா விசாவில் நுழைந்தவர்கள், உண்மையிலேயே சுற்றுப்பயணிகள் அல்ல.

ஆனால் சுற்றுப்பயணிகள் என்ற போர்வையில் மலேசியாவில் வேலை செய்வதற்கு வந்த தொழிலாளர்கள் ஆவர் என்பது தாங்கள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்த ஆணையம் கூறுகிறது.

சுற்றுலா விசா தவறாக பயன்படுத்தப்பட்டது மூலம் அதன் வாயிலாக அந்நிய நாட்டவர்கள் நாட்டிற்குள் சுலபமாக நுழைவதற்கு குடிநுழைவு முகப்பிடங்களில் செட்டிங் முறை அமைக்கப்படுவதற்கு வழிவகுத்துள்ளது.

இந்த சிறப்பு முகப்பிடங்களை அமைப்பதற்கு குடிநுழைவு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் நிலை ஏற்பட்டதுடன் அந்நிய நாட்டவர்களை மலேசியாவிற்கு கொண்டு வரும் மோசடி கும்பல்கள் உருவாகுவதற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று SPRM விசாரணையில் தெரியவந்துள்ளது.

மலேசியாவிற்கு வந்தப் பின்னர் இது போன்ற சட்டவிரோத கும்பல்களிடம் வெளிநாட்டவர் தலா 6 ஆயிரம் வெள்ளி முதல் 12 ஆயிரம் வெள்ளி வரை செலுத்துவது மூலம் முறையற்ற வழிகளில் அவர்களுக்கு மிக எளிதாக வேலை பெர்மிட் கிடைத்து விடுகிறது என்று அந்த வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.

இத்தகவலை SPRM புலன் விசாரணைப்பிரிவின் இயக்குநர் ஜைனுல் தாருஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் குடிநுழைவுத்துறையைச் சேர்ந்த 49 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இதற்கு முன்பு SPRM தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்து இருந்தார்.

WATCH OUR LATEST NEWS