அந்த ஆடவர் வீட்டோடு எரிக்கப்பட்டு இருக்கலாம்

மஞ்சுங் , செப்டம்பர் 25-

பேரா, சித்தியவான், தமன் முஹிப்பா 2 இல் ஒரு வீட்டில் இன்று அதிகாலையில் நிகழ்ந்த தீச்சம்பவத்தில் கருகி கிடந்த ஆடவர், வீட்டோடு கொளுத்தப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

போலீசார் மேற்கொண்ட புலன்விசாரணையில் அந்த வீடு, தீப்பற்றிக்கொள்வதற்கு முன்பு ஆடவர் ஒருவர் அந்த வீட்டிற்குள் நுழைந்து இருக்கிறார் என்று நேரில் பார்த்த சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார் என்று மஞ்சுங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

அதன் பின்னர் அந்த வீட்டில் அலறல் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய அந்த நபர் பின்னர் பெட்ரோல் நிரப்பப்பட்டவை என்று நம்பப்படும் இரண்டு பிளாஸ்டிக் கொள்கலன்களுடன் அந்த வீட்டிற்குள் மறுபடியும் நுழைந்ததாக அந்த சாட்சி விவரித்துள்ளார் என்று ஏசிபி ஹஸ்புல்லா குறிப்பிட்டார்.

விசாரணைக்கு பின்னர் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி அந்த வீட்டிலிருந்து சற்று அருகாமையில் உள்ள ஒரு இடத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த நபரை வரும் அக்டோபர் முதல் தேதி வரை தடுத்துவைப்பதற்கு போலீசார், நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS