ஈப்போ , செப்டம்பர் 28-
அண்மையில் கைப்பேசி ஸ்கேம் மோசடியில் சிக்கிய பணி ஓய்வுப்பெற்ற 72 வயது மூதாட்டி ஒருவர், ரொக்கப்பணத்தையும், தங்க கட்டிகளையும் இழந்தது மூலம் அவருக்கு 6 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கூறுகிறது.
தங்களை போலீசார் என்று அடையாளம் கூறிக்கொண்ட அந்த ஏமாற்றுக்கும்பல், சம்பந்தப்பட்ட மூதாட்டி, சட்டவிரோதப் பண மாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறி, மோசடி செய்துள்ளது.
அந்த மூதாட்டி, தனது வாழ்நாள் சேமிப்பான ரொக்கப்பணத்தையும், தங்க கட்டிகளையும் இழந்துள்ளார் என்று என்று புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இயக்குநர் கமிஷனர் டத்தோஸ்ரீ ராம்லி முகமட் யூசுப் தெரிவித்தார்.
அந்த மூதாட்டியின் கைப்பேசி எண், சைபர் குற்றச்செயல்களில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த கும்பல் தெரிவித்ததுடன் மூதாட்டியின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் நிதியை பாதுகாப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
அந்த கும்பலின் பேச்சை நம்பிய மூதாட்டி, அவர்கள் கோரிய அனைத்து தரவுகளையும் தந்த நிலையில் மூதாட்டியின் ரொக்கப்பணம் மற்றும் தங்க கட்டிகளை பறிகொடுத்துள்ளார் என்று டத்தோஸ்ரீ ராம்லி முகமட் தெரிவித்துள்ளார்.