பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 28-
அரசாங்கத்தில் இந்திய சமூகத்திற்காக போதுமான வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு பிரதமர் அலுவலகத்தில் போதுமான பணியாளர்கள் இல்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் மறுத்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்பது மட்டும் அல்ல.ஆதாரமற்றவையாகும் என்று சண்முகம் மூக்கன் விளக்கினார்.
இந்தியர்கள் நலன் சார்ந்த விவகாரங்களை கவனிப்பதற்கு பிரதமர் அலுவலகத்தில் போதுமான பணியாளர்கள் இருக்கின்றனர். தமது சொந்த அலுவலகத்திலேயே மூன்று பணியாளர்கள் இருப்பதாக சண்முகம் மூக்கன் தெளிவுபடுத்தினார்.
தவிர இந்திய விவகாரங்களை கையாளுவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரினால் தாம் பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டு இருப்பதையும் சண்முகம் மூக்கன் சுட்டிக்காட்டினார்.
இந்திய சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளை கவனிப்பதிலும், அவற்றை தீர்ப்பதிலும், தொடர்புக்குரிய இடைவெளிகளை குறைப்பதிலும் உரிய கவனம் செலுத்துவதற்காக பெரும்பாலான அதிகாரிகள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்திய சமுதயாத்தின் பிரச்னையை கவனிப்பதிலும், அவற்றை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வதிலும் பிரதமர் அலுவலகத்தில் போதுமான பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இல்லை என்று அண்மையில் கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் சண்முகம் மூக்கன் இந்த விளக்கத்தை தந்துள்ளார்.