கோலாலம்பூர், செப்டம்பர் 28-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அடுத்த மாதம் 18 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கும் 2025 ஆண்டு பட்ஜெட்டிற்கான நிதி ஒதுக்கீடு, 403.7 பில்லியன் அல்லது 40 ஆயிரத்து 337 கோடி வெள்ளியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரபல நிதி ஆய்வியல் நிறுவனமான TA Securities Holdings Berhad மதிப்பீடு செய்துள்ளது.
இந்த மொத்த நிதி ஒதுக்கீட்டில் 305.7 பில்லியன் அல்லது 30 ஆயிரத்து 570 கோடி வெள்ளி நிர்வாக செலவினத்திற்கும், 97.9 பில்லியன் அல்லது 9 ஆயிரத்து 790 கோடி வெள்ளி மேம்பாட்டிற்கும் ஒதுக்கப்படலாம் என்று அந்த நிறுவனம் கோடிகாட்டியுள்ளது.
2025 இல் 76.4 பில்லியன் வெள்ளி அல்லது 3.7 விழுக்காடு என மிக குறைவான நிதிப்பற்றாக்குறைக்கு வித்திடக்கூடிய செலவினங்களுடன் ஒப்பிடுகையில் மிக வலுவான வருவாய் வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட் வகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த நிறுவனம் கூறுகிறது.
ஒட்டுமொத்தத்தில் 2026 ஆம் ஆண்டில் சரியான பொருளியல் வளர்ச்சிக்கு அடித்தளமிடக்கூடிய அஸ்திவாரமாக பிரதமர் தாக்கல் செய்யக்கூடிய 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக TA Securities Holdings Berhad கூறுகிறது.