கிள்ளான்,அக்டோபர் 01-
தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் ஏற்பாட்டில் தோட்ட செயலவை உறுப்பினர்களுக்கு வழங்கக்கூடிய தலைமைத்தவப் பயிற்சியில் பங்கேற்றவர்கள், தாங்கள் அறிந்து கொண்ட மற்றும் கற்றுக்கொண்ட விஷயங்களை தோட்டத்தில் உள்ள அங்கத்தினர்களுக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி. சங்கரன் கேட்டுக்கொண்டார்.


தோட்ட தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள், தொழிற்சங்கத்தின் அடிப்படை சட்டவிதிகள், பணியிடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் பணியிட சுகாதார பாதுபாப்பு முறைகள் முதலியவற்றை இது போன்ற பயிற்சி பட்டறைகளின் வாயிலாக கற்றுக்கொள்வது மூலம் தொழில் அமைதிக்கும், நல்லிணக்கத்திற்கும் வழிவகுக்க முடியும்,/ அத்துடன் சக அங்கத்தினர்களுக்கு வழிகாட்ட முடியும் என்று டத்தோ சங்கரன் குறிப்பிட்டார்.


கிள்ளான், Gold Course Hotel – லில் சிலாங்கூர் மாநில தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த செப்டம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் தோட்டத் தொழிற்சங்கப் பொறுப்பாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாமை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்து உரையாற்றுகையில் டத்தோ சங்கரன் இதனை தெரிவித்தார்.


முன்னதாக, இந்த இரண்டு நாள் பயிற்சி முகாமில் பணியிட சூழல், சமூகவியல் மற்றும் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அந்தந்த துறையைச் சார்ந்த பேச்சாளர்கள் உரை நிகழ்த்தினர்.
முதல் நாள், முன்னாள் போலீஸ் கமிஷனர் டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகன், சமுதாயத்தில் இளையோர்கள் மத்தியில் நிலவும் சமூகவியல் பிரச்னைகள் குறித்து புள்ளிவிபரங்களுடன் உரை நிகழ்த்தினார்.




இரண்டாவது நாள், சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்கோ அதிகாரி திருமதி எலிசபெத், சமூக பாதுகாப்பு குறித்து பேசினார். மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் வேலு பெருமாள், பணியிட சூழலுக்கு ஏற்ப தொழிலாளர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டிய முறை குறித்து உரையாற்றினார்.
தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பேரா மாநில செயலாளர் குணசன், தோட்டத் தொழிற்சங்கத்தின் புதிய கூட்டு சம்பளம் குறித்து விளக்கம் அளித்தார். காப்புறுதித்துறை உயர் அதிகாரி காளிதாசன், காப்புறுதி பாதுகாப்பு குறித்து விவரித்தார்.


பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் டத்தோ சங்கரன், நற்சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்தார். இந்த நிகழ்வில் சிலாங்கூர் மாநில செயலாளர் வை.தாமசேகரன், பேராக் மாநில செயலாளர் எம்.குணசன், தேசிய உத்தியோகஸ்தர் எஸ்.நாராயணசாமி உட்பட 60 தோட்ட பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.