ஜொகூர் , அக்டோபர் 01-
நடைபெற்று முடிந்த ஜோகூர், மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் அதிக பெரும்பான்மை வாக்குகளில் மகத்தான வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து தங்களுக்கு இடையிலான உறவை சரிப்படுத்திக்கொள்வதற்கு பக்காத்தான் ஹராப்பான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
அம்னோவிடமோ அல்லது பாரிசான் நேஷனலிடமோ அப்படியொரு மன்னிப்பை கேட்க வேண்டிய அவசியம் பக்காத்தான் ஹராப்பானுக்கு இல்லை என்று ஜோகூர் டிஏபி செயற்குழு உறுப்பினர் டாக்டர் பூ செங் ஹவ் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இப்படியொரு பகிரங்க மன்னிப்பு கேட்கப்பட வேண்டும் என்று ஜோகூர, புலை அம்னோ டிவிஷன் தலைவர் நூர் ஜஸ்லான் முகமது முன்வைத்துள்ள பரிந்துரை ஏற்புடையது அ ல்ல என்று அவர் குறிப்பிட்டார்.
மஹ்கோட்டா இடைத் தேர்தலில் அம்னோவைச் சேர்ந்த பாரிசான் நேஷனல் வேட்பாளர் சையது உசேன் சையது அப்துல்லா 27 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த 27 ஆயிரம் வாக்குகளில் கிட்டத்தட்ட 14 ஆயிரம் வாக்குகள் பாக்காத்தான் ஹராப்பான் ஆதரவாளர்கள் மூலம் கிடைத்ததாகும் என்று டாக்டர் பூ செங் ஹவ் தெரிவித்தார்.
நலிவுற்று இருந்த நாட்டின் பொருளாதாரத்தை பிரதமரும், பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தம்முடைய சீரிய தலைமைத்துவத்தினால் பொருளாதார மீட்சியை கொண்டு வருகிறார். இது, குற்றுயிரும், குலையுயிருமாக கிடந்த அம்னோவிற்கு புத்துயிர் கொடுத்துள்ளது என்பதான் உண்மை என்று டாக்டர் பூ செங் ஹவ் குறிப்பிட்டார்.