கோலாலம்பூர், அக்டோபர் 03-
கோலாலம்பூர், சேரஸ் – கஜாங் நெடுஞ்சாலையின் கம்போங் பத்து 10-வில் நேற்றிரவு ஏற்பட்ட மலைமுகட்டு நீர்ப்பெருக்கத்தில் சிக்கிக்கொண்ட ஒரு சிறார் உட்பட ஐவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் இரவு 9.05 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப்பெற்றதாக அதன் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் தெரிவித்தார்.
சேரஸ், பந்தர் துன் ஹுசைன் ஒன் – னிலிருந்து ஒரு தீயணைப்பு, மீட்புப்படை வண்டியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆறு வீரர்கள், வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மூன்று ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு சிறார் ஆகியோரை பாதுகாப்பாக மீட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
அந்த ஐவரையும் மீட்பதற்கு ஆற்றை கடக்கும் தொழில்நுட்ப முறையை வீரர்கள் கையாண்டதாக அவர் விளக்கினார்.
