கோலாலம்பூர், அக்டோபர் 03-
பேரா மாநில மஇகாவிற்கு தலைமையேற்றுள்ள டான்ஸ்ரீ எம். இராமசாமி, இந்திய சமுதாயத்தின் மிகப்பெரிய கட்சியான மஇகாவில் அடுத்த மூன்று ஆண்டு காலக்கட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரப்போவதாக இன்று உறுதி அளித்துள்ளார்.
மஇகாவின் தேசிய பொருளாளரான டான்ஸ்ரீ இராமசாமி, பேரா மாநில தொடர்புக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்ட கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதியிலிருந்து பேரா மாநிலத்தில் 600 க்கும் மேற்பட்ட கிளைகளை சந்திப்பதற்கு சூறாவளிப்பயணத்தை தொடங்கியிருப்பதாக குறிப்பிட்டார்.
கடந்த 50 நாட்களில் பேரா மாநிலத்தில் கிட்டத்தட்ட பெரும்பாலான கிளைகளின் பொறுப்பாளர்களை தாம் சந்தித்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மஇகாவில் உறுப்பினர்களின் பலத்தை அதிகரிப்பது மற்றும் இளையோர்களையும், யுவதிகளையும் அதிகளவில் கட்சியில் சேர்ப்பது ஆகியவை தமது இலக்காக இருந்து வருகிறது என்று Malaysia Gazztte- டிற்கு அளித்த பேட்டியில் டான்ஸ்ரீ இராமசாமி இதனை தெரிவித்தார்.