கோலாலம்பூர், அக்டோபர் 03-
1MDB- க்கு சொந்தமான மொத்தம் 230 கோடி வெள்ளி நிதி சம்பந்தப்பட்ட சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பில் 21 குற்றச்சாட்களை எதிர்நோக்கியுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை விடுதலை செய்வதா? அல்லது தற்காப்பு வாதம் புரிய உத்தரவிடுவதா? என்பது குறித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி முடிவு செய்யவிருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி தொடங்கி இன்று முடிவடைந்த 12 நாட்கள் நடைபெற்ற இவ்வழக்கு மீதான பிராசிகியூஷன் தரப்பின் வாதத் தொகுப்பை செவிமடுத்த உயர் நீதிமன்ற நீதிபதி Datuk Collins Laerence Sequerah, தீர்ப்பின் தேதியை அறிவித்தார்.
இவ்வழக்கில் தங்கள் வாதத்தொகுப்பை சிறப்பான முறையில் சமர்ப்பித்த அனைத்து தரப்பினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்ட நீதிபதி Collins Laerence, இம்மாதம் இறுதியில் முடிவை அறிவிப்பதாக குறிப்பிட்டார்.
பிராசிகியூஷனால் முன்னெடுக்கப்பட்ட இந்த வழக்கில் நஜீப்பிற்கு எதிரான 21 குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரங்கள் இல்லை என்று நீதிமன்றம் கண்டறியுமானால், அவர் எதிர்வாதம் புரியும்படி அழைக்கப்படாமலேயே விடுதலை செய்யப்படுவார்.
அடிப்படை முகாந்திரங்கள் இருப்பது தெரியவந்தால் 71 வயதான நஜீப், தனக்கு எதிரான 21 குற்றச்சாட்டுகளை எதிர்த்து, எதிர்வாதம் புரிய வேண்டும்.