கோலாலம்பூர், அக்டோபர் 03-
தமது 52 ஆம் ஆண்டு திருமண நாளை உஸ்பெகிஸ்தான் நாட்டில் மிக விமரிசையாக கொண்டாடுவதற்கு திட்டமிட்டு இருந்த முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் கனவு, நிறைவேறாமல் போனது.
அந்த மதிய ஆசிய நாட்டிற்கு மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் செல்வதற்கு பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் முகைதீன் திட்டமிட்டு இருந்த வேளையில் தனது அனைத்துலக கடப்பிதழை கேட்டு, அவர் செய்து கொண்ட விண்ணப்பத்தை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

அதிகார துஷ்பிரயோகம் உட்பட நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை செஷன்ஸ் நீதிமன்றதில் எதிர்நோக்கியிருக்கும் முகைதீனின் கடப்பிதழை, தற்போது நீதிமன்றம் பிடித்து வைத்துள்ளது.
அந்த கடப்பிதழை தற்காலிகமாக திரும்பக்கோரி, 77 வயது முகைதீன் செய்து கொண்ட விண்ணப்பத்தை நிராகரிப்பதாக நீதிபதி அஸுரா அல்வி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
குற்றவியல் வழக்கை எதிர்நோக்கியிருக்கக்கூடிய ஒருவர், தனது திருமண நிறைவு விழாவை கொண்டாடுவதற்கு கடப்பிதழை கோருவது, ஒரு நியாயமான காரணமாக இருக்க முடியாது என்று நீதிபதி அஸுரா குறிப்பிட்டார்.
தனது விடுமுறையையோ அல்லது விழா கொண்டாட்டத்தையோ முகைதீன் கொண்டாடுவதற்கு உரிமைப்பெற்றுள்ளார். ஆனால், வெளிநாட்டில் அல்ல என்று நீதிபதி தமது தீர்ப்பில் தெளிவுப்படுத்தினார்.