செப்பாங்,அக்டோபர் 03-
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் காணொளியில் , சாலை நடுவே இரண்டு நபர்களை காரோட்டி ஒருவர், கார் ஸ்டீரெங் இரும்புப் பூட்டு கம்பியினால் தாக்கப்பட்ட சம்பவம், அதிருப்தியின் காரணமாக நிகழ்ந்து இருக்கலாம் என்று நம்பப்படுவதாக செப்பாங் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சுப்ரின்ரெண்டன் ஷான் கோபால் கிருஷ்ணன் தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை மதியம் 12.17 மணியளவில் இச்சம்பவம் தொடர்பில் போலீஸ் புகார் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக காலை 11.50 மணியளவில் டெங்கில் பட்டணத்தில் சம்பந்தப்பட்ட காரோட்டினால் தாமும், தமது சகாவும் தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் தனது போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளதாக ஷான் கோபால் கிருஷ்ணன் குறிப்பிட்டார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் இருவரும் கடும் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். இதன் தொடர்பில் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக நம்பப்படும் தனியார் உயர் கல்விக்கூடத்தைச் சேர்ந்த 20 வயது மாணவன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட மாணவன், இந்த தாக்குதலுக்கு பயன்படுத்திய இரும்புப் பூட்டையும் போலீசார் பறிமுதல் செய்துள்தளாக அவர் குறிப்பிட்டார்.