கோலாலம்பூர், அக்டோபர் 03-
மலேசியா, கடந்த 1957 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது முதல் பாகிஸ்தானுடன் தூதரக தொடர்பை கொண்டுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கு இன்று உறுதிப்பூண்டுள்ளன.
பாகிஸ்தானுக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்- புடன் நடத்திய சந்திப்பின் போது, இரு நாட்டுத் தலைவர்களும் இந்த உறுதிப்பாட்டை தெரிவித்துக்கொண்டனர்.
பாகிஸ்தான் பிரதமரின் அதிகாரத்துவ இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இரு நாடுகளின் நலன் சார்ந்த அம்சங்கள் தொடர்பான விவகாரங்களில் இரு வழி ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்வதற்கும் இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம் கண்டனர்.
தவிர உலகளாவிய நிலையில் முஸ்லிம் பெருமக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகள் குறித்தும் இரு நாட்டுத்தலைவர்களும் விவாதித்தனர்.