புத்ராஜெயா,அக்டோபர் 03-
இரண்டு குண்டர் கும்பல்களுக்கு இடையில் நிகழ்ந்த சண்டையில் ஆடவர் ஒருவரை சராமாரியாக வெட்டிக்கொன்ற குற்றத்திற்காக ஐந்து இந்திய நபர்களுக்கு புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் இன்று தலா 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
54 வயது ஏ. சைமன், 30 வயது எஸ். சுதாகர், 36 வயது ஜே.சிவசந்திரன், 39 வயது B. தியாகு மற்றும் 32 வயது எஸ். சுந்தரமூர்த்தி ஆகிய ஐந்து நபர்களும் தங்களுக்கான தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்று செய்து கொண்ட மேல்முறையீட்டை மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி ஜபரியா யூசுப் தள்ளுபடி செய்தார்.
இந்த ஐவரும் பிடிபட்ட தினமான 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து தண்டனை அமலுக்கு வருவதாக நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
இந்த ஐவரில் 50 வயதை கடந்து விட்ட சைமனை தவிர மற்ற நால்வருக்கும் 12 பிரம்படித் தண்டனை விதிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த ஐவரும் Gang 21 மற்றும் Gang 04 ஆகியவற்றுக்கு இடையில் நடந்த சண்டையில் ஏ. பச்சையப்பன் என்ற அரசுவை சராமாரியாக வெட்டிக் கொன்றதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இவர்கள் இக்குற்றத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் பகாங், மெந்தக்காப், தமன் புக்கிட் பெண்டேரா -வில் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.