கோலாலம்பூர், அக்டோபர் 04-
சர்ச்சைக்குரிய GLOBAL IKHWAN SERVICES AND BUSINESS HOLDINGS நிறுவனத்திற்கு சொந்தமான 13 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள 206 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
தவிர, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 19 துண்டு நிலங்கள், 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி நசிருதீன் முகமது அலி உட்பட 24 பேருக்கான தடுப்புக்காவலை மேலும் நீட்டிப்பதற்கு நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார்.
கடந்த செப்டம்பர் மாதம் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான 20 சமூக நல இல்லங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது 402 சிறார்கள் மீட்கப்பட்டனர். அவர்களில் 13 பேர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.