டாக்கா , அக்டோபர் 04-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வெள்ளிக்கிழமை வங்காளதேசத்திற்கு அதிகாரத்துவப்பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார். பிரதமரின் இந்த வருகை, வங்காளதேசத்துடனான 52 ஆண்டு கால வரலாற்றை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
தற்போதைய சவால் நிறைந்த சூழ்நிலையில் அந்நாட்டிற்கு டத்தோஸ்ரீ அன்வார் பயணம் மேற்கொள்வது, அந்நாட்டு மக்களுக்கு மலேசியாவின் ஆதரவை புலப்படுத்துவதாக உள்ளது என்று வங்காளதேசத்திற்கான மலேசியத் தூதர் ஹஸ்னா முஹம்மது ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
கடந்த 1972 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வங்காளதேசம் ஒரு சுதந்திர நாடாக பிரகடன்படுத்தப்பட்ட போது அதனை அங்கீகரித்த உலகின் முதலாவது முஸ்லிம் நாடு மலேசியாவாகும். அந்த வரலாற்று நிகழ்வை மீண்டும் நினைவுக்கூரத்ததக்க வருகையாக மலேசியப் பிரதமரின் இந்த வருகை அமைகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
வங்காளதேசத்தில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்ட இந்த இரண்டு மாத காலக்கட்டத்தில் அந்த தெற்காசிய நாட்டிற்கு வருகை மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுத் தலைவராக டத்தோஸ்ரீ அன்வார் விளங்குகிறார்.