இடைவிடாது பாலியல் தொல்லை / சட்டத்தின் பிடியில் சிக்கினார் அந்த முன்னணி வங்கியின் உயர் அதிகாரி”

ஈப்போ , அக்டோபர் 04-

தனக்கு கீழ் வேலை செய்து வந்த பெண் அதிகாரியிடம் பாலியல் தொல்லை கொடுத்து, அவரை இம்சைப்படுத்தி வந்ததாக கூறப்படும் மே வங்கி, ஈப்போ, பெர்காம் கிளையின் உயர் அதிகாரிக்கு எதிராக தேசிய வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கமான NUBE ( நியூப் ), மிகப்பெரிய மறியல் நடவடிக்கையில் ஈடுபட்ட வேளையில் அந்த உயர் அதிகாரி, சட்டத்தின் பிடியில் இன்று சிக்கினார்.

ரோஸ்மன் ஜமாலுதீன் என்ற 52 வயதுடைய அந்த உயர் அதிகாரி, இன்று காலையில் ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். அவருக்கு எதிராக இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

அந்த முன்னணி வங்கியில் வேலை செய்து வந்த 38 வயது பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில் ஆபாச குறுந்தகவல்களை Whatsapp-பில் அனுப்பி வைத்தது மற்றும் அந்தப்பெண்ணிடம் கண்ணியம் குறைவாக நடந்து கொண்டதாக Rosman Jamaluddin குற்றஞ்சாட்டப்பட்டார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி காலை 10.52 மணியளவில்ஈப்போ, கார்டன் ஈஸ்ட், ஜாலான் பெராஜுரிட் என்ற வளாகத்திலும், பின்னர் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட 18 ஆம் தேதி மதியம் 12.08 மணியளவில் மேற்கூறப்பட்ட வளாகத்திலும் அந்த நபர், இத்தகைய பாலியல் சேட்டைகளைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட அதிகாரியின் நடவடிக்கையை எதிர்த்து அந்தப் பெண் புகார் அளித்தும், வங்கியின் உயர் அதிகாரிகள், குற்றஞ்சாட்டப்பட்ட நபரை பகிரங்கமாக தற்காத்து வந்ததாக NUBE ( நியூப் ) பொதுச் செயலாளர் எஸ்.சாலமன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

அந்த அதிகாரியின் இந்த பாலியல் தொல்லை நடவடிக்கையை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் மாதம் பிற்பகுதியில் ஈப்போ, Bercham-மில் உள்ள மே வங்கி – வங்கி அலுவலகத்திற்கு வெளியே நியூப் உறுப்பினர்கள் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்ட மறியலில் ஈடுபட்டனர்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 5 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தன் கீழ் ரோஸ்மன் ஜமாலுதீன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

எனினும் குற்றஞ்சாட்டப்பட்ட ரோஸ்மன் ஜமாலுதீன் , தனக்கு எதிரான இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரியதால் அவரை 2 ஆயிரத்து 500 வெள்ளி ஜாமீனில் விடுவிப்பதற்கு மாஜிஸ்திரேட் எஸ்.புனிதா அனுமதித்தார்.

WATCH OUR LATEST NEWS